மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் இன்று முதன் முதலாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அபிசித்தர் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து வசதிகளுடன் கூடிய நிரந்தர அரங்கம் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். அதன்படி அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தில் 16 ஏக்கரில், 44 கோடி ரூபாய் மதிப்பில் ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களாக நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள அரங்கத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மறைந்த முன்னாள் முதமைச்சர் கருணாநிதியின் சிலை மற்றும் காளையுடன் இருக்கும் மாடுபிடி வீரன் சிலையையும் திறந்து வைத்தார். தொடர்ந்து, இந்த புதிய அரங்கில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. 500 காளைகள் இன்று களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. பிரமாண்ட அரங்கின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நிறைவு பெற்றது. சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர், 10 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றுள்ளார். விளாங்குடியை சேர்ந்த பரத்குமார், சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் ஆகியோர் தலா 6 காளைகளை அடக்கி, 2வது இடம் பெற்றனர்.
அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெற்ற அபி சித்தருக்கு மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்பட்டது. அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர், மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு கார் மற்றும் ரூபாய் 1 லட்சம் ரொக்கப் பரிசை வழங்கினர். இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு பைக் பரிசாக வழங்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 17ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதில், முதல் பரிசாக 18 காளையை அடக்கிய மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 17 நாடுகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் என்ற வீரருக்கு இரண்டாவது பரிசாக 1.5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் அபி சித்தர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டி ஒருதலை பட்சமாக நடந்து கொண்டது என குற்றம்சாட்டினார். முதல் பரிசு பெற்ற கருப்பாயூரணி கார்த்திக்கு 3 சுற்றுகள் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. கமிட்டியிடம் முறையிட்டும் எனக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இறுதிச் சுற்றில் மாடுகள் பிடிக்கப்பட்டதை எண்ணினால் யார் வெற்றி பெற்றார் என்பது தெரியவரும். எனக்கு கார் தேவை இல்லை. என்னை முதல் இடம் என்று அறிவித்தாலே போதும் என முறையிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.