சசிகலா போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே பிரமாண்டமாக கட்டியுள்ள பங்களாவில் கிரகப்பிரவேசம் நடத்தினார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மேலும் அவர் முதல்வர் பதவி மீது கண்வைத்த நிலையில் தான் உச்சநீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டதால் வேறு வழியின்றி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு அதிமுக பொதுச்செயலாளர் என்ற பொறுப்புடன் அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா தொடர்ந்து அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என்று கூறி வருகிறார். தற்போது அதிமுக எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் சசிகலா தொடர்ந்து அதிமுகவை ஒருங்கிணைப்பேன் என்றே கூறி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.
இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு சசிகலா கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு சென்றிருந்தார். ஜெயலலிதாவின் சிலையோடு கூடிய நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டியவர் மீண்டும் சென்னை திரும்பினார். இந்நிலையில் தான் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே சசிகலா பிரமாண்டமாக சொகுசு பங்களா கட்டியுள்ளார். இந்த பங்களாவின் கிரகப்பிரவேஷம் இப்போது நடந்துள்ளது. இந்த கிரகப்பிரவேச விழாவின்போது பங்களாவின் முன்பு பசு மாடு, கன்று குட்டிகள் அழைத்து வரப்பட்டு பூஜை செய்யப்பட்டன. பசு மாடு ஒன்றின் நெற்றியில் சசிகலா தடவி கொடுத்து வணங்கினார். அதன்பிறகு அந்த பசுவுக்கு அவர் சந்தனம் பூச முயன்றார். இந்த வேளையில் பசு மிரண்டுப்போனது. பசுவை ஒருவர் பிடித்து இருந்தாலும் கூட அது ஆக்ரோஷமாக மிரண்டது. இதனால் அந்த நபர் தனது பிடியை விட்டார். இதையடுத்து தரையில் இருந்து ஆக்ரோஷமாக துள்ளிய பசு சுருண்டு விழுந்தது. இதனால் சசிகலா மற்றும் அங்கு கூடியிருந்த அவரது உறவினர்கள் மிரண்டு போயினர். இதுதொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.