“மம்தா பானர்ஜி எங்களுடைய அக்கா. நாங்கள் அவரை நேசிக்கிறோம், மதிக்கிறோம். இண்டியா கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்” என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
‘வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிப்போம்’ என்று சபதம் எடுத்துக்கொண்டு தீவிரமாக பிரச்சாரம் செய்துவருகிறார்கள் எதிர்க்கட்சி தலைவர்கள். நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கினார்கள். இண்டியா கூட்டணியின் வேகம் தடைபட்டுள்ளது என்றும், பலவீனமான ‘இண்டியா’ கூட்டணி நீடிக்காது என்றும் பாஜக விமர்சித்து வந்தது.
அதை மெய்பிக்கும் வகையில், ‘மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும்’ என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ள நிலையில், “இண்டியா கூட்டணியின் முக்கியமான தூணாக திரிணமூல் காங்கிரஸ் இருக்கிறது. மம்தா பானர்ஜி இல்லாத இண்டியா கூட்டணியை யோசித்து கூட பார்க்க முடியாது” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், இதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இந்தப் பின்புலத்தில் மம்தா பானர்ஜியின் அறிவிப்பு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி., சுப்ரியா சுலே இன்று செய்தியாளர்களிடத்தில் கூறும்போது, “மம்தா பானர்ஜி எங்களுடைய தீதி (அக்கா). நாங்கள் அவரை நேசிக்கிறோம், மதிக்கிறோம். இண்டியா கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். கூட்டணிக்கு எந்த இழப்பும் ஏற்படாது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வோரு மாதிரியான மாடல் இருக்கும். இண்டியா கூட்டணியில் எந்தவொரு பூசலும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.