பீகார் ஆளுநருடன் முதல்வர் நிதிஷ்குமார் திடீர் சந்திப்பு!

பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை முதல்வர் நிதிஷ்குமார் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பீகாரில் தற்போது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. ஆனால் நிதிஷ்குமாரின் ஜேடியூ மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக நிதிஷ்குமார் உருவாக்கிய “இந்தியா” கூட்டணி அவரை ஓரம்கட்டி விட்டதால் அதிருப்தி அடைந்துள்ளாராம் நிதிஷ்குமார். “இந்தியா” கூட்டணியின் பிரதமர் வேட்பாளர், ஒருங்கிணைப்பாளர் பதவியை எதிர்பார்த்த நிதிஷ்குமாருக்கு தாம் ஓரம் கட்டப்பட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்திவிட்டதாம். இதனால் தற்போதைய ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணியில் இருந்து விலகி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ்குமார் இணைய முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வரும் 28-ந் தேதி பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் புதிய ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளார் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று திடீரென பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நிதிஷ்குமார் சந்தித்தார். இதனால் தமது முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய போவதாக தகவல்கள் பரவின. இருப்பினும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு நிதிஷ்குமார் திரும்பி இருக்கிறார். அதனால் ராஜினாமா கடிதத்தை கொடுத்தாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை. இன்னொரு பக்கம் நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவுடன் முதல்வராவவதைத் தடுக்க ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் படுதீவிரமாக காய்களை நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பீகார் மாநிலத்தில் அரசியல் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.