பிரான்ஸுக்கு இந்தியர்களை அழைக்கும் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்!

குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, இந்திய அரசின் அழைப்பை ஏற்றுப் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வந்துள்ளார். இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இந்திய மாணவர்களைப் பிரான்சில் உயர்கல்வி படிக்க ஊக்குவிக்கும் திட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாகக் குடியரசு விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பு வெளியிட்டார்.

2030ஆம் ஆண்டுக்குள் 30,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களைப் பிரான்ஸ் பல்கலைகழத்தில் சேர்க்கும் லட்சிய இலக்கை பிரான்ஸ் கொண்டுள்ளது என்று அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வலியுறுத்தினார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட பதிவில் 2030-ல் பிரான்சில் 30,000 இந்திய மாணவர்கள். இது எங்களின் லட்சிய இலக்கு, இந்த இலக்கை அடைவதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார். மேலும் தனது பதிவில் QS ரேங்கிங்-ல் 35 பிரான்ஸ் பல்கலைக்கழகமும், டைம்ஸ் ரேங்கிங்-ல் 15 பிரான்ஸ் பல்கலைக்கழகமும் உள்ளது. இந்தியாவும் – பிரான்ஸ்-ம் இணைந்து சாதிக்க வேண்டியது அதிகமாக உள்ளது, இதன் துவக்கத்தை உங்களிடம் இருந்து துவங்க உள்ளோம். இத்திட்டம் மூலம் இரு நாட்டு இளம் தலைமுறையினர் மத்தியில் நட்புறவு அதிகரிக்கும். இதோடு இந்தியர் பிரான்ஸ் மொழியைக் கற்ற முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்த உள்ளோம், புதிய பிரன்ச் பயிற்சி சென்டர்களை அமைக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, பிரான்ஸ் தூதர் தியரி மாத்தூ கூறுகையில், மேற்படிப்புக்காகப் பிரான்ஸ் செல்ல விரும்பும் இந்திய மாணவர்கள் சில சமயங்களில் விசா தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆனால், மாணவர்களை வரவேற்க பிரான்ஸ் தயாராக இருப்பதால் இது இனி இதுபோன்ற பிரச்சனை நடக்காது, என்று கூறினார். கடந்த ஆண்டு முதல், முதுகலைப் பட்டம் அல்லது அதற்கு மேல் பட்டம் பெற்ற இந்திய மாணவர்கள் மற்றும் பிரான்சில் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டர் படித்தாலும், அந்நாட்டில் 5 ஆண்டுகளுக்குத் தங்கும் குறுகிய கால ஷெங்கன் விசாவிற்குத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டது. இது இந்திய மாணவர்கள் பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து படிப்பது மட்டும் அல்லாமல் புதிய வேலைவாய்ப்புகள் பெறும் வாய்ப்புக்கு நெருங்கி அழைத்துச் செல்லும். வேலைவாய்ப்பு கிடைத்த பின்பு பணி செய்வதற்கான விசா-வை பெறலாம். இந்திய மாணவர்களும், மக்களும் அதிகளவில் அமெரிக்கா, பிரிட்டன் செல்ல முக்கியமான காரணம் மொழி பிரச்சனை இல்லாமல் இருப்பது தான். ஜெர்மனி, ரஷ்யா, உக்ரைன், சீனா, பிரான்ஸ், ஜப்பான் நாடுகளுக்குச் செல்லும் மாணவர்கள் அந்நாட்டு மொழியைப் படித்துச் சேர்ச்சி அடைந்த பின்பு தான் செல்ல முடியும் என்ற கட்டாயம் உள்ளது.