பீகாரில் இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே யாரும் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் இப்போது மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களில் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் தொடரும் நிலையில், பீகாரிலும் அரசியல் குழப்பம் உச்சத்தில் இருக்கிறது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கைகோர்க்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகும் நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “ஜேடியு கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து என்னிடம் தகவல் இல்லை. இந்த விவகாரம் குறித்து அவர்களுக்குக் கடிதம் எழுதி இருக்கிறேன். அவர்களிடம் பேச முயன்றேன் ஆனால் நிதிஷ் குமாரின் மனதில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை.. பீகாரில் என்ன நடக்கிறது என்பது குறித்துத் தெரிந்து கொள்ள நாளை டெல்லி செல்ல உள்ளேன். என்ன தான் நடக்கிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம். நிதிஷ் ராஜினாமா செய்யப் போகிறாரா என்பது குறித்த தகவல்கள் எங்களிடம் இல்லை. அவர் கவர்னரை சந்திக்க உள்ளாரா என்பது குறித்து எங்களிடம் இல்லை. இப்படி என்னிடம் எந்த தகவலும் இல்லாத போது எது உண்மையானது என்று சொல்ல முடியாது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று அவர் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குச் சவாலை ஏற்படுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்ட முடியவில்லை. அனைத்து கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டு வர தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக கார்கே கூறினார். இது குறித்து கார்கே கூறுகையில், “அனைவரையும் ஒரே அணியில் கொண்டு வர நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். நான் மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோரிடம் பேசினேன். நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை அவர்களிடம் சொன்னேன், அப்போதுதான் நல்ல சவாலைக் கொடுக்க முடியும். இந்தியா கூட்டணி நமது நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும். யாரும் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.