மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி மனோஜ் ஜாரங்கே நேற்று பல லட்சம் பேருடன் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அம்மாநில அரசின் உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் மனோஜ் ஜாரங்கே.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பூர்வகுடிகளான மராத்தா ஜாதியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது 25 ஆண்டுகால கோரிக்கை. மகாராஷ்டிரா அரசுகள் இதனை ஏற்று சட்டங்கள் நிறைவேற்றிய போதும் உச்சநீதிமன்ற உத்தரவுகளால் நடைமுறைக்கு வராமலேயே கைவிடப்பட்டன. ஆனாலும் மராத்தா ஜாதியினர் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக மனோஜ் ஜாராங்கே இந்தப் போராட்டங்களுக்கு தலைமை வகித்து வருகிறார். மராத்தா இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பல லட்சக்கணக்கான மக்களுடன் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார் மனோஜ் ஜாரங்கே.
இதன் ஒரு கட்டமாக மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை நோக்கி லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் நேற்று படைதிரட்டி வந்தார் மனோஜ் ஜாரங்கே. முதனால் மும்பை-புனே பழைய நெடுஞ்சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. மும்பை ஆசாத் மைதானத்தில் நேற்று தமது காலவரையற்றப் போராட்டத்தை மனோஜ் ஜாரங்கே தொடங்கினார். இதனால் மகாராஷ்டிரா அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மனோஜ் ஜாரங்கேவின் மராத்தா இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்பதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதி மொழி கடிதம் ஒன்றை வழங்கினார். இந்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு தமது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார் மனோஜ் ஜாரங்கே.
தற்போது மனோஜ் ஜாரங்கேவுக்கு அளித்த உறுதி மொழியின்படி மகாராஷ்டிரா சட்டசபை சிறப்பு கூட்டத் தொடரில் மீண்டும் மராத்தா இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது. மேலும் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக உரிமைகளை மராத்தா ஜாதியினர் பெறுவதற்கான குன்பி சான்றிதழ்கள் முழுமையாக வழங்கவும் மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.