நாகர்கோவிலில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சீமான் தலைமையில் போராட்டம்!

நாம் தமிழர் கட்சியின் குமரி மாவட்ட நிர்வாகி சேவியர் குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மைலோடு மடத்துவிளையைச் சேர்ந்தவர் சேவியர் குமார் (45). போக்குவரத்துக் கழக ஊழியரான இவர், நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்து வந்தார். இவருக்கு ஜெமினி என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

சேவியர் குமார் மைலோட்டில் உள்ள மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில், இதற்கு முன்பு பொறுப்பில் இருந்துள்ளார். இதனால் தற்போதைய நிர்வாகத் தவறுகளைச் சுட்டிக்காட்டி சமூக வலை தளங்களில் அவர் பதிவிட்டு வந்ததால், பங்கு பேரவை நிர்வாகத்துக்கும், சேவியர் குமாருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 20-ம் தேதி மாலை மைலோடு ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்தில் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இச்சம்பவம் தொடர்பாக திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, மைலோடு பாதிரியார் ராபின்சன் உட்பட 15 பேர் மீது இரணியல் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிரியார் ராபின்சன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு கிராமத்தில் கொலை செய்யப்பட்ட சேவியர்குமாரின் குடும்பத்தினருக்கு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆறுதல் தெரிவித்தார் .
சேவியர் குமாரின் உடல் நீதிமன்ற உத்தரவுப்படி மைலோடு கல்லறை தோட்டத்தில் வருவாய் துறை முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்வழக்கில் திமுக நிர்வாகி ரமேஷ்பாபு உட்பட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி, நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சீமான் பேசியதாவது:-

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து தண்டனை பெற்று தரவேண்டும். இச்சம்பவத்தில் நீதி கிடைக்கும் வரை, எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

போராட்டத்தில் சேவியர் குமாரின் மனைவி ஜெமினி, தனது இரு மகள்களுடன் கலந்துகொண்டார். அவர் கூறும்போது, “நியாயத்துக் காக பாடுபட்ட எனது கணவரை ஆலய வளாகத்திலேயே ஈவு இரக்கமின்றி கொலை செய்திருப்பதை யாராலும் எளிதில் மறக்க முடியாது. எனது கணவரின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை நான் போராடுவேன்” என்றார்.

முன்னதாக, நேற்று காலை மைலோட்டில் உள்ள சேவியர் குமாரின் வீட்டுக்குச் சென்ற சீமான், சேவியர் குமாரின் மனைவி ஜெமினி, இரு மகள்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சேவியர் குமாரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவியை வழங்கினார்.