பாஜக இல்லை என்றால் இன்றைக்கு திமுகவே இல்லை: வானதி சீனிவாசன்

பாஜகவை நம்பிதான் இன்றைக்கு திமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. பாஜக இல்லை என்றால் திமுகவின் அரசியலே இல்லை என்று வானதி சீனிவாசன் கூறினார்.

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜகவை கடுமையாக சாடி விமர்சித்தார். அப்போது அவர், “மத்தியில் பாசிச ஆட்சி நடத்தி வரும் பாஜகவை இந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் நாம் ஒழித்துக்கட்ட வேண்டும். ஆனால், தமிழகத்தில் இருக்கும் பாஜகவை பற்றி யாரும் கவலைக் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் இங்கு பாஜக எப்போதுமே பூஜ்ஜியம் தான்” என்று ஸ்டாலின் கூறினார்.

முதல்வரின் இந்த பேச்சானது பாஜகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்நிலையில், முதல்வர் இப்படி பேசியது குறித்து கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

பாஜக ஒரு பூஜ்ஜியமா.. பாஜக பூஜ்ஜியம் என்றால் எதற்கு நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சட்டமன்றத்தில் நீங்கள் பதில் சொல்றீங்க? சட்டமன்றத்துக்கு வெளியே எதற்காக உங்கள் அமைச்சர்கள் எங்களுக்கு பதில் சொல்றாங்க? பூஜ்ஜியத்துக்கு தான் மதிப்பில்லையே.. எங்களுக்கு நீங்க பதிலே சொல்ல வேண்டாமே.. இன்னைக்கு பாத்தீங்கனா.. திமுகவின் அரசியல் என்பதே பாஜகவை நம்பிதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தற்போது திமுகவின் அரசியல் என்பதே பாஜகவை எதிர்ப்பதாக தான் மாறியுள்ளது. பாஜக இல்லை என்றால் இன்றைக்கு திமுகவே இல்லை. இது மக்களுக்கே நன்றாக தெரியும். அதனால் முதல்வர் இப்படி பேசுவதே பாஜக மீது உள்ள பயத்தின் வெளிப்பாடுதான். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.