ஆசிய கண்டத்திலேயே நிதிஷ்குமாரை போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதியை யாரும் பார்க்க முடியாது என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் நிதிஷ்குமார் மீது பெரும் நம்பிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்தர்பல்டி அடித்து இந்தியா கூட்டணியிலிருந்து விலகி தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் மங்களத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிதிஷ்குமார் பற்றி கூறியதாவது:-
வி.பி. சிங் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவ்வப்போது கூட்டணிகளை மாற்றினார். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் கூட்டணி மாறுவது சகஜமானது. ஆனால் நிதிஷ் குமாரின் அரசியல் போக்கு சந்தர்ப்பவாதம் நிறைந்தது.18 மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் முரண்பாடு கொண்டு, ராஷ்டீரிய ஜனதா தளத்துடன் கூட்டணி கொண்டு மீண்டும் முதல்வர் ஆனார் நிதிஷ். பாஜகவையும், ஃபாசிசத்தையும் வீழ்த்தப் போவதாக கூறி இந்தியா கூட்டணியை உருவாக்கியதால் நிதிஷ் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவானது. இடையே பீகாரில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. இன்று லாலு, தேஜஸ்வி யாதவுடன் முரண்பட்டு மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் நிதிஷ் குமார். இவரை போல் இப்படி ஒரு சுயநல – பதவி பித்தரை நாடு பார்த்ததில்லை. இந்தியாவில் மட்டுமல்ல. ஆசியா கண்டத்திலேயே நிதிஷ் குமார் போன்ற சந்தர்ப்பவாத அரசியில்வாதி யாருமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.