இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற தமிழகத்தில் சில கட்சி தலைவர்கள் காத்திருக்கிறார்கள் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைக்காட்சி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே பேசினார். இந்த பேச்சு நாமக்கல் நகர பா.ஜனதா சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல்.முருகன் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டனர். பின்னர் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தனிப்பட்ட நபர்களால் மேற்கொள்ளப்படும் சமுதாய பணிகளை பாராட்டி மத்திய அரசின் மூலம் அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. அவ்வாறு விருது பெற்றவர்களை மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டி உள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பத்ரப்பன் என்பவர் அழிந்து வரும் நாட்டுப்புற பாடல்களை பொதுமக்களுக்கு எடுத்து சென்றதை பாராட்டியும், பல்வேறு சமூக நலப்பணிகளை செய்த மறைந்த நடிகர் விஜயகாந்தை பாராட்டியும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
‘இந்தியா’ கூட்டணி மக்களை குழப்பும் கூட்டணி என்று ஏற்கனவே கூறி வந்தார்கள். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே கூட்டணி உடைந்துள்ளது. தற்போது மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனியாக போட்டியிடுவதாக அறிவித்து உள்ளன. கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் ஒரே கூட்டணியில் போட்டியிட முடியாத சூழல் உள்ளது. மேலும் தமிழகத்திலும் இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சி தலைவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு காத்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.