கூட்டணிக்காக அப்போ அமைதியா இருந்தோம்: டிஆர் பாலு

நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கை கோர்த்துள்ள நிலையில், இது தொடர்பாக திமுக மூத்த தலைவர் டிஆர். பாலு சில முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே மிகப் பெரிய அரசியல் குழப்பம் நிலவியது. நிதிஷ்குமார் ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக உள்ளதாகத் தகவல்கள் பரவின. நிதிஷ்குமார் நடவடிக்கைகளும் அதை நோக்கியே இருந்தது. இந்தச் சூழலில் தான் நேற்று காலை ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி நிதிஷ்குமார், மாலை பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இது இந்தியா கூட்டணிக்கு மிகப் பெரிய பின்னடைவு எனப் பலரும் விமர்சித்த நிலையில், டிஆர் பாலு இதற்கு விளக்கமளித்துள்ளார்.

இதற்கு முன்பே நடந்த இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் நிதிஷ்குமாருக்கும் டிஆர் பாலுவுக்கும் இடையே மோதல் வெடித்து இருந்தது. அதாவது கடந்த டிசம்பர் 19ஆம் டெல்லியில் இந்தியா கூட்டணி மீட்டிங் நடந்த நிலையில், அப்போது பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் இந்தியில் பேசியுள்ளார். இதையடுத்து அவரது பேச்சை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யுமாறு ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜாவிடம் டி.ஆர்.பாலு கேட்டுள்ளார்.இதற்கு திடீரென டென்ஷனான நிதிஷ்குமார்.இந்திதான் தேசிய மொழி என்றும் ஆங்கிலத்தைப் பிரிட்டிஷ் அரசு திணித்தது என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் அப்போதே வெளியானது. இதுவே இந்தியா கூட்டணிக்குள் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே நிதிஷ்குமார் விலகியதால் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்று டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஆர் பாலு, “இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. அந்த கூட்டணியில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. கூட்டணியில் யாராலும் பிரச்சினைகளை ஏற்படுத்த முடியாது. நிதிஷ்குமார் ஒருத்தர் தான். இந்தியா கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் இருக்கிறது. கூட்டணியில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. நிதிஷ் குமார் ஒருவர் மட்டும் விலகியதால் இந்தியா கூட்டணியில் எந்த பின்னடைவும் இல்லை. மேலும், இந்தியா கூட்டணிக்கு என்று நிதிஷ்குமார் எந்தவொரு திட்டத்தையும் கூறியது இல்லை. இந்தி பேச வேண்டும் என்று கூட நிதிஷ் குமார் ஒரு சமயம் கூறினார். அப்போது கூட கூட்டணிக்காகவே நாங்கள் அமைதியாக இருந்தோம். மேலும், தான் பிரதமராக வேண்டும் என்று நிதிஷ் குமார் ஒரு போதும் கூறவில்லை” என்றார்.

தொடர்ந்து திமுக- காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசிய அவர், “அனைத்து கட்சிகளுக்கும் தாங்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்றே நினைப்பார்கள். திமுக கூடத் தான் 40க்கு 40 தொகுதிகளும் நிற்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், கூட்டணி இருக்கிறது. கூட்டணி என்று வந்தால் தொகுதிகளைப் பிரித்துப் போட்டியிட வேண்டும். திமுக 20+ தொகுதிகளில் நிற்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம். அமைச்சர் உதயநிதி இளைஞர்களுக்கு அதிகம் வாய்ப்பு தர வேண்டும் எனக் கூறியிருந்தார். அதில் எந்தவொரு தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. நானும் கூட இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றே சொல்கிறேன். மேலும், தற்போதைய சூழலில் எந்த கட்சி வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம்” என்றார்