அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்தாரா என உயர் நீதிமன்ற பதிவாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006-2011 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை, சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்திருந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை ஏற்று அவர்களை விடுவித்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து மீண்டும் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் லஞ்ச ஒழிப்புத்துறை யூ டர்ன் போட்டுள்ளது என்றும் சரமாரியாக விமர்சித்தது உயர் நீதிமன்றம். மேலும், இந்த வழக்கு பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்குகள் தொடர்பாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என இருவரும் வலியுறுத்தியுள்ளனர். கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின் யாரும் மேல்முறையீடு செய்யாத நிலையில், சுயமாக உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிப்பதற்கு மனுவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி ஒப்புதலுடன் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிக்கிறாரா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை தானாக முன்வந்து தனி நீதிபதி விசாரித்தாரா என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற ரோஸ்டர் நீதிமன்றத்தால் வழங்கப்படவில்லை. பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.