அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன். பணமுறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. 8 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. 9-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டபோது எனது வீட்டில் வைத்து விசாரணை நடத்தப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்தார். அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிம் விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஜனவரி 27-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்குள் ஆஜராகி பதில் அளிக்கும்படி 10-வது முறையாக சம்மன் அனுப்பியது.
இன்று ராஞ்சியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். சுமார் 13 மணி நேரம் சோதனை நீடித்துள்ளது. அப்போது சொகுசு கார் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்துவதாகவும், தனக்கும் தன்னைத் சார்ந்த சமூகத்தினருக்கும் களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக எஸ்.சி./எஸ்.டி. காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகளின் செயல்களால் நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் பெரும் மன உளைச்சல், உளவியல் பாதிப்பை எதிர்கொள்வதாக புகாரில் தெரிவித்துள்ளார். டெல்லியில் கைப்பற்றப்பட்ட காரின் உரிமையாளர் நான் இல்லை. அதேபோல் கைப்பற்றதாக கூறப்படும் பணம் என்னுடைய அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இன்று ராஞ்சியில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஹேமந்த் சோரன் ஆதரவாளர்கள் மொராபதி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஜார்னா பால் கூறுகையில் “ஹேமந்த் சோரன் குறிவைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் பழங்குடியினர் என்பதால். ஆனால் அவர் எங்களுக்கு கடவுள் போன்றவர். அவருக்காக எந்த எல்லை வரும் செல்வோம். அவர் ஜெயிலுக்கு சென்றால் அவருடன் நாங்களும் சிறைக்குச் செல்வோம்” என்றார்.