இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பேன்: நிதிஷ் குமார்

இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பேன் என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இண்டியா என பெயர் வைக்கப்பட்டபோது, வேறு பெயர் வைக்குமாறு நான் வலியுறுத்தினேன். ஆனால், அவர்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள். நான் எவ்வளவோ தீவிரமாக முயன்றேன். ஆனால், அவர்கள் ஒன்றைக்கூட ஏற்கவில்லை. இன்று வரையும்கூட அந்தக் கூட்டணியில் எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது முடிவு செய்யப்படவில்லை. எனவேதான் நான் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டேன். நான் ஏற்கெனவே எந்தக் கூட்டணியில் இருந்தேனோ அதே கூட்டணிக்கு வந்துவிட்டேன். இனி எப்போதும் இதே கூட்டணியில் இருப்பேன். பிஹார் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.

பிகாரில் புதிய அரசு அமைந்துள்ளதை அடுத்து பிகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறும். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வருகிறார். இது ஏதோ அவரது யோசனைபோல கூறி வருகிறார். பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு எப்போது நடந்தது என்பதை அவர் மறந்துவிட்டாரா? 9 கட்சிகள் முன்னிலையில் இந்த கணக்கெடுப்பை நான் நடத்தினேன். 2019-20ல் நான் எங்கு சென்றாலும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நான் பேசி இருக்கிறேன். ராகுல் காந்தி போலியாக உரிமை கொண்டாடுகிறார். நான் என்ன செய்ய முடியம்?. இவ்வாறு அவர் கூறினார்.

பிகார் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர், நவம்பரில் நடைபெற்றது. இதில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஓரணியாகவும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரணியாகவும் போட்டியிட்டன. ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. கடந்த 2022 ஆகஸ்டில் பாஜக உடனான கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தார். நிதிஷ்குமார் முதல்வராகவும் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர்.

இந்த நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘இண்டியா’ கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளமும் அங்கம் வகித்தது. இந்த சூழலில் நிதிஷ்குமார் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.