ஹேமந்த் சோரன் கைதுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாகவும், அதன் மூலம் பண பலன்களை அடைந்ததாகவும் அமலாக்கத்துறை கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனையடுத்து அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக தொடர் போராட்டங்களை நடத்தி ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி கொடுத்தது. இப்படி இருக்கையில், எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வை முன்கூட்டியே கணித்த சோரன், கடந்த ஆண்டு தானே முன்வந்து நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டமன்றத்தில் நடத்தினார். இதில் பெரும்பாலான எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் அவரது ஆட்சி தப்பியது. இருப்பினும், வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை 9 முறை சம்மன்களை அனுப்பியிருந்தது.

இதற்கிடையில், கடந்த 20ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். அதை தொடர்ந்து கடந்த 29ம் தேதி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டை மேற்கொண்டனர். விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த போதிலும் அதிரடி ரெய்டு மேற்கொண்டதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் விமர்சித்தனர். இப்படி இருக்கையில் நேற்றிரவு ஹேம்ந்த் சோரன் கைது செய்யப்பட்டார். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஆளுநரை சந்தித்தபோது அவருடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றிருந்தனர். கடிதம் வழங்கப்பட்ட உடனேயே அவர் கைது செய்யப்பட்டார். இவருடைய கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த கைது நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது, “ஹேமந்த் சோரனின் கைது நடவடிக்கை பழிவாங்கும் செயல். புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி பழங்குடியினரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்ததாகும். இந்த செயல் விரக்தியையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் தூண்டுகிறது. பாஜகவின் கேவலமான தந்திரங்கள் எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கிவிடாது. பாஜகவின் பழிவாங்கும் அரசியல் சிக்கியிருந்தாலும், அவர்களுக்கு தலைவணங்க மறுத்து உறுதியாக நிற்கிறார். இன்னல்களை எதிர்கொண்டாலும் ஹேமந்த் சோரனின் மனஉறுதி பாராட்டுக்குரியதாக இருக்கிறது. பா.ஜ.க.வின் மிரட்டல் தந்திரங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அவரது உறுதிப்பாடு உத்வேகமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.