பட்டப்பெயர் வைத்து தன்னை கூப்பிடுவது தனக்கு பிடிக்கவில்லை என்றும் சின்னவர் என்று அழைக்க வேண்டாம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று தெரியும், ஆனல் நான் கேட்பது அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். பட்டப்பெயர் வைத்து என்னை அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை. நான் சின்னவர் தான், உங்களை விட வயதில் சின்னவர். வாழும் பெரியார், இளைய கலைஞர் என்று அழைக்கிறீர்கள். ஆனால் நான் உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருக்க ஆசைப்படுகிறேன். அது தான் நிரந்தரம், தயவு செய்து பட்டப்பெயரை தவிர்த்து விடுங்கள்.
கடுமையான நிதி நெருக்கடி இருக்கும் போது ஆட்சிக்கு வந்தோம். முதலமைச்சர் முதலில் போட்ட கையெழுத்து பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம். இதன்மூலம் பெண்கள் மாதத்திற்கு ரூ.900 வரை சேமிக்கிறார்கள். வருடத்திற்கு ரூ.12,000 சேமிக்கிறார்கள். சிறு சிறு குறைகள் இருக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். சிலருக்கு இன்னும் ரூ.1,000 வரவில்லை என்று சொன்னார்கள். உங்கள் பகுதியில் அதற்கான பட்டியலை தயார் செய்து மாவட்டச் செயலாளரிடம் வழங்குங்கள். அதைச் சரி செய்யும் பணியில் நான் இறங்குகிறேன். 90% மக்களுக்கு இந்த ரூ.1,000 சென்று விட்டது.
உருட்டல் மிரட்டலுக்கு பயப்பட திமுக அடிமை கூட்டம் கிடையாது. திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. எங்களுக்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன். நான் கலைஞரின் பேரன். ஜாதி, மதம் கிடையாது, அனைவரும் சமம் என்று தான் நான் பேசினேன். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக கைதாக போகிறார்கள். 2021 தேர்தலில் அடிமைகளை துரத்தி வீட்டுக்கு அனுப்பினோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டி அடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.