தொடர்ந்து பிரதமராக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர் பிரதமர் மோடி: அண்ணாமலை

“தொடர்ந்து பிரதமராக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர் பிரதமர் மோடி. திமுக அரசு கடவுளுக்கு எதிரான அரசு என எல்லோருக்கும் தெரியும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

‘என் மண் என் மக்கள்’ 183 தொகுதிகளை கடந்துவிட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் பலதரப்பட்ட மக்களை சந்தித்து பிரதமர் மோடியின் திட்டங்களை எடுத்து சென்றுள்ளோம். வரும் பிப்ரவரி 11-ஆம் நாள் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வருகிறார். 200-வது தொகுதியாக பிப்ரவரி 11-ஆம் தேதி சென்னைக்கு வருகிறோம். 234-வது தொகுதியாக பல்லடத்தில் நிறைவு விழா நடைபெற இருக்கிறது. பிப்ரவரி 25-ஆம் தேதி பிரதமர் மோடி திருப்பூர் வருகிறார்.

தேர்தலுக்கு அனைவரும் தயாராகி வருகிறார்கள். 530 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய மைதானத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை அங்கே நடக்கவிருக்கிறது. 5 லட்சம் இருக்கைகள், 10 லட்சம் பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பிரதமர் வருவது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இது மிகப் பெரிய எழுச்சியான மாநாடாக நடக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பிரதமர் சென்னைக்கு மூன்று முறை வந்திருக்கிறார். திருச்சிக்கு ஒருமுறை வந்திருக்கிறார். திண்டுக்கல் பகுதிக்கும் வந்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தென்தமிழகம் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், கோவைக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் வரவில்லை. அரசியல் நிகழ்ச்சியும் எதுவும் நடைபெறவில்லை. சென்னைக்கு பிரதமர் மோடி மூன்று முறை வந்திருப்பதால், பிரதமர் செல்லாத ஒரு புதிய பகுதிக்கு அவரை அழைக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறினார்கள்.

கூட்டணி பேச்சுவார்த்தை கடினமான விஷயம், எளிதாக முடிக்க முடியாது. கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் கூட்டணி பற்றி தெரியவரும். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியமைப்பார். மேலிடம் என்னை தேர்தலில் போட்டியிட சொன்னால் போட்டியிடுவேன், கட்சிப் பணியை பார்க்க சொன்னால் அதை செய்வேன். எல்லாருக்கும் பணி கொடுக்கப்பட்டுள்ளது, எனவே, சொல்லும் வேலையை செய்வோம். தமிழகம் முழுவதும் சுற்றி வந்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதுதான் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை.

இந்தியாவில் ஆன்மிகம் வந்துவிட்டது. திமுக கடவுளுக்கு எதிரான அரசு என எல்லோருக்கு தெரியும். திருவண்ணாமலை மக்கள் பாஜகவுக்கு எம்பியை கொடுத்தால் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் நாங்கள் கோயிலை சுற்றுலா தளமாக மாற்றுவோம். 39 தொகுதியிலும் முதல் இடம் பெறவே உழைத்து வருகிறோம். 2024 தேர்தலுக்கு எது முக்கியமோ அதை மட்டும் தற்போது செய்து கொண்டிருக்கிறோம். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக பல இடங்களில் முதலில் இருக்கும். சில இடங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும்.

நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. பங்காளிகள் எங்களை பகையாளியாக நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல. 2024 தேர்தல் என்பது மோடியின் களம். மோடியின் ஊழல் இல்லாத அரசுக்காக, வலிமையான அரசுக்காக மக்கள் அவருக்கு ஓட்டு போட தயாராகி விட்டனர். தொடர்ந்து பிரதமராக இருக்கக்கூடிய தகுதி பெற்றவர் பிரதமர் மோடி. ஜி.கே.வாசன் எங்களிடம் கூட்டணி குறித்து பேசி வருகிறார். பரஸ்பர நட்புக்காக பல கட்சிகளுடன் பேசி வருகிறார். யாரையும் நாம் தடுக்க முடியாது.

ஆறு மாதத்துக்கு முன்பு திருமாவளவன், சனாதான தர்மத்தை ஏன் எதிர்க்கிறோம் என்றால் பிராமணர்கள் மட்டும்தான் கடவுளிடம் செல்கிறார்கள், கர்ப்பகத்துக்குள் இருக்கிறார்கள், அதனால் சமாதான தர்மத்தை எதிர்க்கிறோம் என்றார். ஆறு மாதம் கழித்து பிராமணர் அல்லாத பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்யும்போது, இதையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார். இதைக் கேட்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. பிரதமரின் பிராண பிரதிஷ்டை நிகழ்வு என்பது 142 கோடி இந்தியர்களின் நிகழ்வு. இவ்வாறு அவர் கூறினார்.