இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பிருப்பதாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி பிப்ரவரி 8-ந் தேதி ஆஜராக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (என் ஐஏ) உத்தரவிட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்துடன் தமிழருக்கு தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், புலிகள் இயக்க கொடி ஆகியவற்றை நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் திரைப்பட இயக்குநர் சீமான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதுவரை மத்திய அரசு நாம் தமிழர் கட்சி, சீமான் தரப்பு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில் திடீரென தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் செல்போன்கள், லேப்டாப்கள், புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க ஆயுத கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகத்தின் பேரில் இந்த சோதனையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்டனர்.
மேலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி, விசாரணைக்கு நேரில் ஆஜராகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் முன்பாக நேற்று இடும்பாவனம் கார்த்தி ஆஜராக இருந்தார். ஆனால் அவரது தந்தை நேற்று மறைந்ததால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து வரும் 8-ந் தேதி விசாரணைக்கு இடும்பாவனம் கார்த்தி ஆஜராக வேண்டும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.