லோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று ஓ பன்னீர் செல்வம் பேசிய நிலையில், தொண்டர்களை குழப்பவே ஓ. பன்னீர் செல்வம் இப்படி பேசியிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
லோக்சபா தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போதே அரசியல் கட்சிகள் இதற்காக ஆயத்தமாகி வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இந்தியா கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இதில் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக திமுக கட்சிகள் இடையே தான் நேரடி போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்துள்ளதால் பாஜகவு தனித்தே போட்டியிட இருக்கிறது.
அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிருகிறது. இதுபோக டிடிவி தினகரனின் அமமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று தெரிகிறது. இது ஒரு புறம் இருக்க ஓ பன்னீர் செல்வம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பாஜவுடன் இனி கூட்டணி கிடையாது என்று அறிவித்ததில் இருந்தே ஓ பன்னீர் செல்வம் பாஜகவுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டார். பிரதமர் மோடியை சந்திக்க இருமுறை ஓ பன்னீர் செல்வம் முயற்சித்தார். இந்த நிலையில் வரும் 11 ஆம் தேதி தமிழகம் வருகை தரும் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை ஓ பன்னீர் செல்வம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், தனியார் செய்தி ஊடகத்திற்கு ஓ பன்னீர் செல்வம் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:-
வரும் சோக்சபா தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற நாங்கள் ஆதரவு அளிப்போம். மேலும் வரும் 11 ஆம் தேதி ஜே பி நட்டாவை சந்திக்கும் திட்டம் உள்ளது. இவ்வாறு ஓ பன்னீர் செல்வம் கூறினார்.
நீதிமன்ற தீர்ப்புகளின்படி அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஓ பன்னீர் செல்வம் பயன்படுத்த முடியாத நிலையில், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று அவர் கூறியிருப்பது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த தான் ஓபிஎஸ் இப்படி பேசியிருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயக்குமார் கூறுகையில், “தொண்டர்களை குழப்ப ஓ பன்னீர் செல்வம் முயற்சிக்கிறார். அதிமுக தொண்டர்களை குழப்பவே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் கூறியிருக்கிறார். தொண்டர்களை குழப்பி கட்சியை அழிக்க ஓபிஎஸ் முயற்சிக்கிறார் என்பதை தொண்டர்களே தற்போது உணர்ந்துள்ளனர்” என்று கூறினார்.