மத்திய இணை அமைச்சர் முருகனிடம், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ராணிப்பேட்டையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரொம்ப வருத்தமான ஒரு விசயம். நாடாளுமன்றத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அவருடைய துறைச் சார்ந்த ஒரு கேள்விக்கு பதிலளிக்கிறார். அப்போது திமுகவின் மூத்த தலைவர், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, மத்திய இணையமைச்சர் முருகனைப் பார்த்து அன்ஃபிட் என்று கூறுகிறார். தகுதியில்லாத அமைச்சர் என்று கூறுகிறார். ஒரு மத்திய அமைச்சர், நாடாளுமன்றத்தில் தன்னுடைய துறை சார்ந்த கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் அமைச்சரைப் பார்த்து டி.ஆர்.பாலு இவ்வாறு கூறியிருக்கிறார். உடனடியாக, அங்கிருந்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட அனைவரும் எழுந்து தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்.
பிஃட் ஆன அமைச்சர் என்றால் யார் என்று டி.ஆர்.பாலுவிடம் கேட்க விரும்புகிறேன். கொள்ளை அடிப்பவரா, அப்பா தலைவராக இருப்பார், மகன் அமைச்சராக இருப்பதா? இல்லை ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் பிஃட் ஆன அமைச்சரா? இல்லை, பணக்காரர்களாக இருந்தால் பிஃட் ஆன அமைச்சரா? அமைச்சர் முருகனின் தாய் தந்தையர் நாமக்கல்லில் தோட்டத்து வேலை செய்து வருவதால், அவர் அன்பிஃட் அமைச்சரா? இல்லை அருந்ததியர் சமுதாயத்தில் பிறந்ததால் அன்பிஃட்டா?
எனவே, மத்திய இணையமைச்சர் முருகனிடம் டி.ஆர்.பாலு பொது இடத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீங்கள் முருகன் குறித்து தவறாக பேசவில்லை. அவருடைய சமுதாயம் குறித்து தவறாக பேசியிருக்கிறீர்கள். தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த பட்டியலின சகோதர, சகோதரிகளை டி.ஆர்.பாலு தவறாக பேசியுள்ளார். ஒட்டுமொத்த அருந்ததிய சமுதாயத்தை தவறாக பேசியுள்ளார். எனவே, இதை எந்த காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழகத்தில் 35 அமைச்சர்கள் உள்ளனர். அதில் மூன்று பேர் மட்டுமே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுவா சமூக நீதி? ஆனால், மத்திய பாஜக அரசில் மொத்தமுள்ள 75 பேரில் 12 பேர் பட்டியலின சமூகத்தினர், 8 பழங்குடியினர் என 20 பேர் அங்கம் வகிக்கிறார்கள். எது சமுக நீதி?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, மத்திய இணையமைச்சர் எல்.முருகனைப் பார்த்து “நீங்கள் எம்.பி. பதவிக்கும், அமைச்சராக இருப்பதற்கும் தகுதியற்றவர்” என்று திமுக எம்.பி. டிஆர் பாலு மக்களவையில் பேசியது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.