ஹேமந்த் சோரனின் அமலாக்கத் துறை காவல் 5 நாட்களுக்கு நீட்டிப்பு!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத் துறை காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜனவரி 31ம் தேதி ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, அதனைத் தொடர்ந்து அன்றைய இரவு 8.30 மணி அளவில் அவரை கைது செய்தது. இதனையடுத்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்கும் PMLA சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஹேமந்த் சோரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து கடந்த 2ம் தேதி உத்தரவிட்டது.

அவரது அமலாக்கத் துறை காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் அவர் ராஞ்சியில் உள்ள PMLA சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, விசாரணை முடிவடையாததால் அவரது காவலை நீட்டிக்குமாறு அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவலை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஹேமந்த் சோரன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது, அங்கு கூடிய அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.