தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி விஜயகாந்த் மறைந்தார். தற்போது மக்களவைத் தேர்தல் பணிகளை தேமுதிகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன்படி, தேமுதிக தலைமை நிர்வாகிகளிடம் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரும், பாஜக தரப்பில் மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி, போட்டியிட விரும்பும் மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மக்களவைத் தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் தேமுதிக தரப்பில் அதிமுக, பாஜகவுக்கு வழங்கியதாகத் தெரிகிறது. இந்தத் தொகுதிகளில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் களமிறக்கப்படலாம் என தெரிகிறது. அதேநேரம், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் திமுக தரப்பிலும் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் தேமுதிக தலைமையைத் தொடர்பு கொண்டு கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிந்து கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.
முன்னதாக பொதுச்செயலாளராக பிரேமலதா பொறுப்பேற்று தொண்டர்கள் மத்தியில் ஆற்றிய முதல் உரையில், “2024 மக்களவைத் தேர்தலில் தேமுதிக எம்.பி.-க்கள் டெல்லிக்கு செல்வது உறுதி. கூட்டணிக்கு வரும் கட்சிகள் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை முதலிலேயே எழுதித் தர வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலைப்பாட்டில் தேமுதிக தலைமை உறுதியாக இருப்பதாகவும், தொண்டர்களின் விருப்பப்படி மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவோருடன் கூட்டணி அமைப்பது என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதியிடம் கேட்டபோது, “கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது. இன்றைய தினம் பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது” என்றார்.