பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகள் மீது போர் தொடுக்கிறது: அரவிந்த் கெஜ்ரிவால்!

மத்தியில் ஆளும் பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகள் மீது போர் தொடுக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகக் கடுமையாக விமர்சித்தார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக தென் மாநிலங்கள் கொந்தளித்தன. கர்நாடகா காங்கிரஸ் எம்பி டி.கே சுரேஷ், இப்படியே போனால் தென்னிந்திய மாநிலங்கள் இணைந்து தனிநாடு கோரும் சூழல்தான் உருவாகும் என பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையாடுத்து நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் அரசு போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில், மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசு போராட்டம் நடத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி ராஜா உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்பாட்டத்தின் போது பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்தியில் ஆளும் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

அமலாக்கத்துறையை மத்திய அரசு புதிய ஆயுதமாக பயன்படுத்துகிறது. மத்தியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் என்ன நடக்கும் தெரியுமா? இதே சட்டம் (PMLA) உங்கள் மீது பாயும். நாட்டில் 70 கோடி மக்களை பிரநிதித்துவபடுத்தும் எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகள் மீது மத்திய அரசு போர் தொடுக்கிறது. இதற்கு முன்பு ஒரு நபர் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டால் அவர் சிறைக்கு அனுப்பப்படுவார். ஆனால் தற்போது யாரையும் ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள். அதன்பிறகே அவர் மீது என்ன வழக்கு போடலாம் என யோசிக்கிறார்கள். வழக்கு தொடங்கும் முன்பாகவே ஹேமந்த் சோரன் சிறையில் தள்ளப்பட்டுள்ளார். நாளை அவர்கள் (பாஜக அரசு) என்னையும், பினராயி விஜயன், ஸ்டாலின், சித்தராமையாவையும் ஜெயலில் தள்ளலாம். அரசை கவிழ்க்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.