தமிழகத்திற்கான வெள்ள நிதி குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன், “உங்க தோப்பனார் வீட்டு காசையா கேட்டோம்?” என நிர்மலா சீத்தாராமனை பார்த்து கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டை இரண்டு பேரிடர்கள் கடுமையாக தாக்கியது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. அதேபோல, அடுத்த சில நாட்களில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை உயிரிழப்புகளையும், உடமை இழப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. இதிலிருந்து மக்கள் மீள ரூ.6000 வரை நிவாரணம் வழங்கப்பட்டது. அதேபோல இதனை தேசிய பேரிடர் நிவாரணமாக அறிவித்து நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடி விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும் மொத்த பாதிப்புகளை எதிர்கொள்ள ரூ.37,000 கோடி வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கேட்கப்பட்டது.
ஆனால், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் பேரிடருக்கான நிதி குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே திமுக எம்பிக்கள் இது குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:-
சென்ற ஆண்டு மிக்ஜாம் எனும் கொடூரமான புயலை சென்னை சந்தித்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதியாக 12,650 கோடியை கேட்டிருந்தார். ஆனால் இதுவரை எங்களுக்கு வந்தது பூஜ்ஜியம்தான். ஒரு நயா பைசா கூட ஒன்றிய அரசிடமிருந்து எங்களுக்கு வரவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்தார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தார், செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்கள், கையசைத்தார்கள்.. ஆனால் ஒரு ரூபாய் கூட நிவாரணம் கொடுக்காமல் சென்று விட்டார்கள்.
தமிழ்நாட்டின் எதிர்காலமான உதயநிதி ஸ்டாலின், ‘எங்கள் வரிப்பணத்திலிருந்து நிவாரணத் தொகையை கொடுங்கள். நாங்கள் ஒன்றும் உங்கள் அப்பா வீட்டு காசை கேட்கவில்லை’ என்று கூறியிருந்தார். இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மணி நேரம் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில் எங்களை வசை பாடினார். உதயநிதி ஸ்டாலின் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் உங்க அப்பன் வீட்டு காசு, உங்க ஆத்தா வீட்டுக்கு காசு, என பேசக்கூடாது எனவும் அறிவுறுத்தி இருந்தார். நாங்கள் இப்பொழுது நிர்மலா சீதாராமனை பார்த்து, உங்கள் தோப்பனார் வீட்டுக் காசையா கேட்கிறோம்? என்று கேட்டால் நன்றாக இருக்குமா? இருக்காது இல்லையா? உங்கள் பேச்சில் வன்மம் இருக்கிறது. அதை நாங்கள் கண்டிக்கின்றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.