தேவேந்திர குல வேளாளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து நீக்குவதாக கொடுத்த வாக்குறுதியை மத்திய பாஜக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகமும் இணைந்திருந்தது. பாஜகவின் அத்தனை நடவடிக்கைகளையும் டாக்டர் கிருஷ்ணசாமி முழு வீச்சில் ஆதரித்தும் வந்தார். தேவேந்திரகுல வேளாளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை புதிய தமிழகம் முன்வைத்தது. இதனை ஏற்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. அப்போது முதலே எந்த அணியில் நீடிப்பது என்பதில் டாக்டர் கிருஷ்ணசாமி குழப்பமான நிலையில் இருந்து வருகிறார். அண்ணா திமுக மீண்டும் பாஜக அணிக்கு திரும்பும் என்பதும் டாக்டர் கிருஷ்ணசாமியின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் பாஜகவுடனான கூட்டணி முறிந்தது முறிந்ததுதான் என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் பாஜக அணியிலேயே புதிய தமிழகம் தொடருமா? அல்லது அதிமுக தலைமையிலான அணிக்கு போகுமா? என்கிற கேள்வி எழுந்தது. பாஜக அணியில் தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பியிருந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனால் பாஜகவோ தென்காசியை விட்டுத் தர மறுத்துவிட்டது. இதனால் ராஜ்யசபா சீட்டுக்கு முயற்சிக்கிறார் கிருஷ்ணசாமி எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி. இது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:-
தேவேந்திர குல வேளாளர்களை எஸ்சி பட்டியலில் இருந்து நீக்குவதாக கொடுத்த வாக்குறுதியை மத்திய பாஜக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டது. இனி பிரதமர் மோடியை கும்பலோடு கும்பலாக நின்று சந்திக்க மாட்டேன். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெல்வோம். பிரதமர் மோடியை தனியாகவே சந்தித்து பேசுவோம். தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கிறதா? இல்லையா? என்பதே தெரியவில்லை. ஏற்கனவே அண்ணா திமுகவே கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. புதிய தமிழகம் கட்சியைப் பொறுத்தவரையில் வெற்றி கூட்டணியில்தான் இடம் பெறுவோம். இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.