தமிழக தலைநகரமான சென்னையில் உள்ள நகரின் முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டுள்ளனர். துணை ராணுவப்படையினர் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாகவே அமலாக்கத்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அமைச்சர்கள், மணல் குவாரி உரிமையாளர்கள், கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலருக்கும் சம்மன் அனுப்பி விளக்கம் பெற்று வருகின்றனர். கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், கொளத்தூர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.கொளத்தூர் சிவ பார்வதி நகரில் அமைந்துள்ள முத்து என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்றது. பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள பிரியா என்பவர் வீட்டிலும், ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் கணேஷ் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனிடையே இன்றைய தினம் காலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட இடங்களில் துணை ராணுவப்படையினர் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.