தந்தை பெரியார், வி.பி.சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: திருமாவளவன்!

வி.பி.சிங், தந்தை பெரியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னா கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு துறைகளில் மிகச் சிறந்த சேவையாற்றிய நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 1951ஆம் ஆண்டு முதல்முறையாக ராஜாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதன்பிறகு முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன், நேரு, இந்திரா காந்தி, அன்னை தெரசா, காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம், வாஜ்பாய் உள்ளிட்ட பலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பாரத ரத்னா விருது பிகார் முன்னாள் முதலமைச்சரும், சமூக நீதிக்காக போராடியவருமான கர்புரி தாக்கூருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அத்வானிக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில் மக்களவையில் உரையாற்றிய விசிக தலைவரும், சிதம்பரம் எம்.பியுமான திருமாவளவன், “கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கியதை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். அதேபோல சமூக நீதி காவலராக தமது முழு வாழ்வையும் ஒப்படைத்துக் கொண்ட முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கும், தந்தை பெரியார் அவர்களுக்கும் கான்சிராம் அவர்களுக்கும் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும்” என்று முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், “ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற்றுக் கொண்டு மாநில அரசுகளோடு கலந்து பேசி மாற்று வகையிலான வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். மாநில அரசுகளுக்கு நேர்மையான முறையில் நிதியை பகிர்ந்தளிக்க வேண்டும். மாநில அரசுகள் தங்களின் தற்சார்பை இழந்திருக்கக் கூடிய நிலையில் 75 சதவிகிதம் அந்த வரி வருவாயில் அவர்களுக்கு நிதியை பகிர்ந்து அளிப்பதற்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், “வாக்குப்பதிவு இயந்திரங்களில் 100 சதவிகிதம் ஒப்புகை சீட்டு இணைக்கப்பட வேண்டும். அதனை எண்ணி முடித்த பிறகே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்கிற கொள்கைகளை முழங்கி இந்தியாவை பிளவுபடுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் இன்றைய ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள் என்பது வேதனை தரக்கூடியது. ஆனால், எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்துவதாக ஒன்றிய அரசும் பிரதமரும் குற்றம் சுமத்துவது எந்த வகையிலும் ஏற்புடையது இல்லை.

அம்பேத்கர் ஒரு கட்டுரையில் வடக்கு தெற்கு என்கிற பாகுபாடு வளர்கிறது என குறிப்பிடுகிறார். ராஜாஜியே இந்த கவலையை பதிவு செய்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று அன்றைக்கு அம்பேத்கர் தமது கவலையை பதிவு செய்திருக்கிறார். அந்த நிலையை உருவாக்கக்கூடிய வகையில் இன்றைக்கு செயல்பட்டு வருவது ஒன்றிய அரசு தான்” என்றும் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.