முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கில் பிப்ரவரி 12ஆம் தேதி தீர்ப்பு!

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது பிப்.12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

2021, பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு இரு பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை(ஏககாலம்) விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் 2023, ஜூன் 16-ஆம்தேதி வழங்கியது.

இந்த தீா்ப்பை எதிா்த்து முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்தாா்.இந்த நிலையில் விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை ஜனவரி 9-ஆம் தேதி சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்யது. இந்த உத்தரவை எதிா்த்தும், வழக்கை கள்ளக்குறிச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இரு வேறு அமா்வுகளில் ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுக்கள் ஜனவரி 24 மற்றும் 29-ஆகிய தேதிகளில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில் இவ்வழக்கில் பிப்.12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.