என்னை பற்றி பேசும் செல்லாக்காசுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை: அண்ணாமலை!

அண்ணாமலை லேகியம் விற்பவர் போல பேசிக்கொண்டிருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்த நிலையில், மீடியோ வெளிச்சத்திற்காக என்னை பற்றி பேசும் செல்லாக்காசுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை என அண்ணாமலை காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக இடையிலான கூட்டணி கடந்த 5 வருடங்களாகத் தொடர்ந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. அண்ணாமலை, அதிமுக தலைவர்களை சீண்டி வந்ததால் அதிரடியாக கூட்டணியை விட்டு வெளியேறியது அதிமுக. அதைத்தொடர்ந்து வரும் லோக்சபா தேர்தலுக்கு பாஜக இல்லாத கூட்டணியை உருவாக்க அதிமுக முயன்று வருகிறது. இந்தநிலையில் தற்போது பாஜக மற்றும் அதிமுக தலைவர்களிடையே நாளுக்கு நாள் வார்த்தைப் போர் முற்றி வருகிறது.

செய்தியாளர் சந்திப்பின்போது, அதிமுகவுக்கு கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார், “அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. பாஜகவுடன் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என அறிவிக்கப்பட்டு விட்டது. அண்ணாவை, ஜெயலலிதாவைப் பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும் தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் இருக்க முடியாது. இயக்கத்தின் மதிப்பு அவருக்கு தெரியவில்லை. நான் மூன்று முறை சட்டமன்ற தேர்தலில் வென்று அமைச்சராகியுள்ளேன். கவுன்சிலரகக் கூட ஜெயிக்காதவர் அவர். அரசியல் அனுபவம் அவருக்கில்லை. தேர்தலில் நின்று வென்றால் தான் பக்குவம் வரும். லேகியம் விற்பவர் மாதிரி பேசி கொண்டிருக்கிறார். அதிமுகவை அழிக்க அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது. இது 2 கோடி தொண்டர்களின் எச்சரிக்கை. ஆண்டவனே வந்தாலும் அதிமுகவை தொட்டுப்பார்க்க முடியாது. பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கிறது தம்பி. நாங்கள் பேச ஆரம்பித்தால் வேஷ்டியை கழட்டி விட்டு நீ ஓடி விட வேண்டும். கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். அண்ணாமலையிடம் பிரதமர் மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஆர்பி உதயகுமாரின் இந்தப் பேச்சு பாஜகவினரை கொந்தளிக்கச் செய்தது. பாஜகவின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் இதற்கு காட்டமாக பதில் அளித்தார். “அண்ணாமலை லேகியம் விற்பவர் தான், ஊழல் நோயை விரட்டும் லேகியத்தை அவர் விற்கிறார். ஊழல் நோயையும் ஊழல்வாதிகளையும் அவர் ஒழிப்பார்” என்று உதயகுமாருக்கு கே.பி. ராமலிங்கம் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று என் மண் என் மக்கள் பயணத்தை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், செய்தியாளர்கள், ஆர்பி உதயகுமாரின் காட்டமான விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “மீடியோ வெளிச்சத்திற்காக என்னை பற்றி பேசும் செல்லாக்காசுகளுக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. பணத்தை கொள்ளையடித்து ஐந்தாண்டுகளுக்கு மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலைகளின் தாரக மந்திரம் எல்லாம் எனக்கு தெரியாது. கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த எனக்கும் தெரியும். ஆனால் அதற்கு அவசியம் இல்லை” எனத் தெரிவித்தார்.