பஞ்சாப், சண்டிகரில் 14 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால்!

பஞ்சாப் மற்றும் சண்டிகரில் மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆம் ஆத்மியே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருக்கிறார்.

பஞ்சாப் அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நியாய விலை பொருள்கள் வீட்டு வாசலில் வழங்கும் திட்டத்தை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு வருடங்களுக்கு முன்னதாக (சட்டசபை தேர்தலில்) உங்களின் ஆசீர்வாதம் எங்களுக்குக் கிடைத்தது. 117 இடங்களில் 92 இடங்களை ஆம் ஆத்மி பெற்று பஞ்சாபில் சாதனை புரிந்தது. தற்போது மக்களவைத் தேர்தல் இரண்டு மாதங்களில் நடைபெற உள்ளது. இன்று மீண்டும் உங்கள் ஆசிர்வாதத்தை நாடி வந்திருக்கிறேன். பஞ்சாபில் 13 இடங்களும், சண்டீகரில் ஒரு இடமும் என மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆம் ஆத்மி வரும் 10-15 நாள்களுக்குள் 14 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை அறிவிக்கும். இந்த 14 தொகுதிகளிலும் எங்களது கட்சியை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கினார்கள். அதில் நிதிஷ் குமார் இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி அமைத்து, பிகாரில் ஆட்சி செய்து வருகிறார். அதே வேளையில், சில தினங்களுக்கு முன்னதாக, நாட்டின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி போட்டியிடும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

அதோடு, வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும், இதில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்றும் அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார். இந்நிலையில், பகவந்த் மானின் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி மற்றும் நிதிஷ் குமார் போன்ற செல்வாக்குமிக்க பிராந்திய தலைவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறியவாறு இருப்பது இண்டியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.