கடந்த யுபிஏ அரசாங்கத்தின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோதிலும், சோனியா காந்தி அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிய சூப்பர் பிரதமராக இருந்தார் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31 அன்று குடியரசுத் தலைவர் உரையுடன் துவங்கியது. பிப்ரவரி 1 அன்று 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பிப்ரவரி 2ம் தேதி முதல் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர். இறுதியாக குடியரசுத் தலைவர் உரை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்து, பிரதமர் நரேந்திர மோடி, பிப்ரவரி 5 அன்று மக்களவையிலும், பிப்ரவரி 7ம் தேதி மாநிலங்களவையிலும் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து கடந்த வியாழனன்று நிர்மலா சீதாராமன் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த போது, பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் பொது நிதி மோசமான நிலையிலும், வராக்கடன் அதிகமாகவும், வங்கிகள் அதிக பலவீனமாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சிகள் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன.
இந்நிலையில் நேற்று இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன், “கடந்த யுபிஏ அரசாங்கத்தின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோதிலும், சோனியா காந்தி அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிய சூப்பர் பிரதமராக இருந்தார்” என்று விமர்சித்திருந்தார். அதாவது, “வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதராப்பூர்வமானவை. தேசிய பாதுகாப்பில் காங்கிரஸ் அரசு கோட்டைவிட்டுவிட்டது. பாதுகாப்பு துறை பற்றி பேச வேண்டும் எனில், ரூ. 3,600 கோடி அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஊழல் பற்றிதான் பேச வேண்டும். 2014ம் ஆண்டு ஆட்சியை நாங்கள் கைப்பற்றியபோது, வெடிமருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறையை நமது ராணுவ வீரர்கள் எதிர்கொண்டிருந்தனர். அவர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட், நைட் விஷன் கிளாஸ் போன்றவை கிடைக்காமல் இருந்தது. ஆனால் இவை அனைத்தையும் கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் அரசாங்கம் சரி செய்தது.
கடந்த ஆட்சி காலத்தில் ஆண்டுதோறும் ஊழல்கள் நடைபெற்றன. 2008ல் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதேபோல 2019ல் கொரோனா தொற்று ஏற்பட்டு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. யுபிஏ அரசாங்கம் எதிர்கொண்டதை போலவே என்டிஏ அரசாங்கமும் நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால் என்டிஏ அரசாங்கம் இதிலிருந்து வெகு விரைவில் மீண்டுவிட்டது. இதைத்தான் இந்த வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதைவிட மோசமான விஷயம் என்னவெனில், காங்கிரஸ் ஆட்சியில் தலைமையே கிடையாது. பிரதமர் என ஒருவர் இருந்தபோதிலும், அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்பட்ட சூப்பர் பிரதமராக சோனியா காந்தி இருந்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் சுற்று பயணத்தில் இருந்தபோது, ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் அவசரச் சட்டத்தை கிழித்தெறிந்தார். இது நாட்டின் பிரதமரை அவமதித்தது போன்றதாகாதா? தேசத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல், சொந்த குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுத்ததன் விளைவைதான் காங்கிரஸ் எதிர்கொண்டிருக்கிறது. 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு மோடி அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது” என்று விமர்சித்திருந்தார்.
இத்தனை விமர்சனைங்களையும் சோனியா காந்தி அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.