விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.
திருச்சி தேசியக் கல்லூரியில் `விளையாட்டில் மறுமலர்ச்சி’ என்ற தலைப்பிலான சர்வதேசக் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி செயலாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவி பேசியதாவது:-
விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. கீழ்நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வெல்லும்போது, அவர்களுக்கு கோடிக்கணக்கில் ரொக்க விருதுகளை வழங்குவதில் மாநில அரசுகள் போட்டியிடுகின்றன. அதேபோல, விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
தற்போது, இந்தியா பதக்கங்கள் பெறுவதில் முன்னேறி வருகிறது. சமீபத்திய சர்வதேச நிகழ்வுகளில், இந்திய வீரர்கள் பல பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். எனவே, விளையாட்டு வீரர்கள் நாட்டின் சொத்துகள். விளையாட்டு நமது பெருமை மட்டுமல்ல, தேச நலனுக்கும் உகந்தது. ‘பிட் இந்தியா’ திட்டம் நாட்டின் விளையாட்டுத் துறைக்கு சக்தி வாய்ந்த கருவியாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள திறமைசாலிகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்க்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
பின்னர் திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரையில் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் ஆசிர்வாதத்துடனும் நிதியுதவிகளுடனும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல ஆயிரம் கிராமப்புற வறியநிலை இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதிகாரம் அளித்து தேசப் பணி செய்து வருகிறது. தேசிய இலக்கான அமிர்தகாலத்துடன் அது தனது அடுத்த 25 ஆண்டுகால பயணத்தை இணைத்து, நமது இளைஞர்கள் மற்றும் பெண்சக்தியின் பொதிந்து கிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர்ந்து, 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.
2030-ம் ஆண்டுக்குள் நமது தேவைகளை 50 சதவீதம் பூர்த்தி செய்ய இயற்கை எரிசக்தியை மட்டுமே பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் இருந்த வறுமை, கல்வி, மருத்துவ கட்டமைப்பு போன்ற அனைத்தும் தற்போது மாறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.