பாஜகவுடன் கூட்டணி இல்லவே இல்லை: எடப்பாடி பழனிசாமி!

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக, இறுதியாகச் சொல்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கீடு ஆலோசனைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை. கடந்த 5 வருடங்களாக பாஜக – அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாத நிலையே ஏற்பட்டது. இதனையடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் இரண்டு கட்சி ஒன்றினைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டது. ஆனால் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக அதிரடியாக வெளியேறியது.

இந்தநிலையில் மீண்டும் அதிமுகவை தங்கள் அணிக்குள் கொண்டு வர பாஜக தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் எதற்கும் எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவில்லை. அமித் ஷாவே, அதிமுகவுக்காக பாஜகவின் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன எனக் கூறியும், எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் மீண்டும் சேர விரும்பவில்லை. அதிமுக தலைவர்கள் அண்ணாமலையையும், பாஜகவையும் தாக்கிப் பேசி வருகின்றனர். எனினும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தற்போதும் பாஜக – அதிமுக மறைமுகமாக கூட்டு வைத்துள்ளதாக விமர்சித்து வருகின்றனர். தேர்தலுக்காக பாஜகவும் அதிமுகவும் நாடகம் நடத்துவதாகவும், லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் இரு கட்சிகளும் சேர்ந்து கொள்ளும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பாஜகவுடன் அதிமுக மறைமுக கூட்டணியில் இருப்பதாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டோம். முன்பே அறிவித்துவிட்டோம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை. அதற்குப் பிறகு கடந்த 5 மாதங்களாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவறான அவதூறான தகவல்களைப் பேசி வருகிறார்கள். இன்று மீண்டும் ஒருமுறை உறுதியாகச் சொல்கிறேன், உறுதியாகச் சொல்கிறேன். அதிமுக, பாஜக கூட்டணியில் இல்லை, இல்லை. இல்லவே இல்லை. இனிமேல் ஊடக நண்பர்கள் இது தொடர்பான எந்தக் கேள்வியும் எழுப்ப வேண்டாம். எந்த ரகசிய பேச்சுவார்த்தையும் கிடையாது. லோக்சபா தேர்தலுக்கு எந்த நேரத்தில் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டுமோ, அந்த நேரத்தில் சரியான கூட்டணி அமையும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.