சபாநாயகரின் அநாகரிக செயலால் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு: ஆளுநர் மாளிகை!

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு அநாகரிகமான முறையில் ஆளுநரை தாக்கிப் பேசியதன் காரணமாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இன்று தமிழக சட்டப்பேரவையில் நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரை விவகாரத்தில் நிகழ்ந்தவை: ஆளுநரின் உரையின் வரைவு அறிக்கையை, அரசிடமிருந்து கடந்த 9-ம் தேதி ராஜ்பவன் பெற்றது. அதில், உண்மையற்ற பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதனால், அதனை ஆளுநர் திருப்பி அனுப்பினார். அப்போது, ஆளுநர் உரை விவகாரத்தில் என்னென்ன விஷயங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான ஆலோசனையை ஆளுநர் வழங்கினார். முதலில், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக, கடந்த காலங்களில் முதல்வர் மற்றும் சபாநாயகருக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார்.

இரண்டாவதாக, ஆளுநரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பிரதிபலிக்க வேண்டும். சட்டப்பேரவை கூட்டப்பட்டதற்கான காரணங்களை பேரவைக்குத் தெரிவிக்க வேண்டும். தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கும், அப்பட்டமான அரசியல் கருத்துகளை வெளியிடுவதற்குமான மன்றமாக இருக்கக் கூடாது. ஆளுநர் இவ்வாறு ஆலோசனை அளித்திருந்தும், ஆளுநரின் ஆலோசனையை அரசு புறக்கணித்தது.

இந்நிலையில், ஆளுநர் இன்று காலை 10 மணியளவில் அவையில் உரையாற்றினார். அவர் தனது உரையில், சபாநாயகர், முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். திருவள்ளுவரின் 738-வது குறளுடன் முதல் பத்தியை படித்தார். அதன்பிறகு ஆளுநர், தவறான தகவல்கள் மற்றும் கூற்றுகளுடன் ஏராளமான பத்திகள் இருந்ததால் அரசியலமைப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு ஆளுநர் உரையை படிக்க தன்னால் இயலவில்லை என்பதை வெளிப்படுத்தினார். மேலும், தமிழக மக்களின் நலனுக்காக இந்த சட்டப்பேரவை அமர்வு பயனுள்ளதாக அமைய வாழ்த்துவதாகவும் கூறி ஆளுநர் தனது உரையை முடித்தார்.

ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை ஆளுநர் அவையில் அமர்ந்திருந்தார். சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி தேசிய கீதத்துக்காக ஆளுநர் எழுந்தார். இருப்பினும், சபாநாயகர் திட்டமிட்டபடி நிகழ்ச்சி நிரல்களை பின்பற்றுவதற்குப் பதிலாக, ஆளுநருக்கு எதிராக அவதூறாகப் பேசினார். நாதுராம் கோட்சே மற்றும் பலரை ஆளுநர் பின்பற்றுவதாக சபாநாயகர் கூறினார். சபாநாயகர் தனது அநாகரிகமான நடத்தையினால், சபையின் கவுரவத்தையும், அவரது நாற்காலியின் கவுரவத்தையும் குறைத்தார். சபாநாயகர், ஆளுநருக்கு எதிராகக் கடுமையாகத் தாக்கியபோது, ஆளுநர் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார். இவ்வாறு தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.