மோடி அரசின் கைப்பாவையாக விசாரணை அமைப்புகள் இருப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளதாவது:-
கோவை உக்கடத்தில் 2022 அக். 23-அன்று கார் எரிவாயு உருளை வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் பின்னர், இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. என்ஐஏ விசாரணை நடத்தி, இந்த வழக்கில் தொடர்புள்ளதாக கூறி 14 பேரை கைது செய்துள்ளது. மேலும், கோவையில் இயங்கி வந்த அரபிக் மொழியை கற்றுக் கொடுக்கும் தனியார் அரபிக் கல்லூரியிலும் என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். சோதனையில் புத்தகங்கள், மடக்கோலைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. அதனடிப்படையில் என்ஐஏ சென்னை பிரிவு அதிகாரிகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தனியாக வழக்கு பதிந்தனர். தனியார் கல்லூரியில் அரபி மொழி பயின்ற மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரின் விவரங்களை வைத்துக் கொண்டு இந்த வழக்கில் அவ்வப்போது விசாரணை என்ற பெயரில் என்ஐஏ அலுவலகம் அழைத்து விசாரிப்பதும், திடீரென ஒரே நாளில் பல ஊர்களில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று சோதனை நடத்துவதுமாக தேவையற்ற பதட்டத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி வந்தனர்.
இந்நிலையில் நேற்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை செய்து சிலரை கைது செய்துள்ளதோடு பலரிடமும் விசாரணைக்கு வர வேண்டும் என அழைப்பாணை கொடுத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் அரபு மொழி பண்டிதர்கள் ஆவர். இஸ்லாமிய மத போதனை, அரபு மொழியை மாணவர்களுக்கு கற்றுத் தந்ததை தவிர வேறு எவ்வித குற்றமும் இவர்கள் செய்யவில்லை. ஒரு குற்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒரு கல்வி நிலையத்தில் படித்தால் அந்த கல்வி நிலையத்தையே பயங்கரவாத நிறுவனமாக சித்தரிப்பதும், ஆசிரியர்களையும், கல்வி நிறுவனத்தில் படித்த நூற்றுக் கணக்கான மாணவர்களையும் தீவிரவாதிகளாக சித்தரித்து விசாரணை நடத்துவதும்,பொய்யாக வழக்கில் சேர்ப்பதும் உலகில் எங்கும் நடக்காத மனித உரிமை மீறலாகும். இத்தகைய அராஜகத்தை தேசிய புலனாய்வு முகமை தொடர்ந்து செய்து வருகிறது.
மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேவையற்ற பதட்டங்களை ஏற்படுத்துவதையும், சிறுபான்மை மக்களையும், மோடி அரசுக்கு எதிரான குரல்களை ஒடுக்குவதையும் செயல்திட்டமாக வைத்திருக்கிறது என்ஐஏ. இதே போன்று தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சிலரது வீடு, தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. வழக்கம் போல மொபைல் போன்கள், புத்தகங்களை தவிர வேறு எதுவும் சோதனையில் கைப்பற்றபட்டதாக தெரியவில்லை. பாஜக வை விமர்சிக்கும் அரசியல் கட்சிகள், ஆளுமைகளை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ,என்.ஐ.ஏ போன்ற ஒன்றிய அரசின் புலனாய்வு துறைகளை வைத்து விசாரணை என்ற பெயரில் முடக்குவது நாட்டில் எதிர்கட்சிகளே இல்லாமலாக்கும் பாசிச செயல் திட்டத்தின் ஒரு பகுதி என மக்கள் கருதுகின்றனர். ஒன்றிய புலனாய்வு அமைப்புகளை ஏவி எதிர்கட்சிகளை முடக்கும் சர்வாதிகார போக்கை பாஜக கைவிட வேண்டும் என்றும் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.