நீட் தற்கொலைக்காக பொங்கி எழுந்து மக்களிடம் போய் கையெழுத்து வாங்கும் நமது முதல்வர் ஸ்டாலின், பல படுகொலைகளுக்கு காரணமான டாஸ்மாக் கடைகளை மூட கையெழுத்து போடாமல் இருப்பது ஏன்? என்று பாஜக தேசிய தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வியெழுப்பினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண்; என் மக்கள்’ பாத யாத்திரையில் பங்கேற்பதற்காக, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று வருகை தந்தார். பின்னர் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், திமுக ஆட்சியை கடுமையாக சாடினார். தான் இன்று சென்னை வரும் போது தெரு விளக்குகளை திமுக ஆஃப் செய்ததாக கூறிய ஜே.பி. நட்டா, விரைவில் திமுகவை மக்கள் ஆப் செய்வார்கள் எனக் கூறினார். மேலும், தலையில் எதுவும் இல்லாமல் திமுக தலைமை ஆட்சி நடத்துவதாகவும் அவர் சாடினார்.
இந்நிலையில், இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
நீட் தேர்வால் 22 தற்கொலைகள் நடந்திருப்பதாகவும், அதனால் நீட்டை ரத்து செய்யக் கோரி 52 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கிவிட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன். இத்தனை பேரிடம் போய் கையெழுத்து வாங்கினீர்களே..நீங்கள் ஒரே ஒரு கையெழுத்தை போடுங்கள். கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக தமிழகத்தில் மதுவால் எத்தனை எத்தனை கொலைகள் நடக்கின்றன. மதுபோதையில் மகனை கொன்ற தந்தை, மதுபோதையில் தந்தையை கொன்ற மகன், சொந்த மனைவி எரித்துக் கொலை என எத்தனை செய்திகளை நாம் பார்க்கிறோம். பல வீடுகளில் மது போதையால் பிரச்சினைகள் எழுகின்றன.
இப்படி பல நூற்றுக்கணக்கான படுகொலைகள் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படுகொலைகளை நிறுத்துவதற்காக டாஸ்மாக் கடைகளை மூட ஸ்டாலின் ஒரே ஒரு கையெழுத்து போடுவாரா? அவரால் போட முடியுமா? ஆனால், மதுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராடும். இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறினார்.