நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ திடீரென்று சோதனை நடத்தி உள்ளது. மேலும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தான் இந்த ரெய்டு ஏன் நடந்தது? பின்னணியில் என்ன நடந்தது? என்பது பற்றி நாம் தமிழர் கட்சியின் சீமான் விளக்கி உள்ளார்.
கடந்த 2ம் தேதி நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தென்காசி உள்பட 10க்கும் அதிக இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், ஐடி விங்க் நிர்வாகி ரஞ்சித் குமார், கோவை காளப்பட்டி முருகன், நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இசை மதிவாணன், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி விஷ்ணு பிரதாப் உள்பட பல நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன் உள்பட 4 நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர். இவர்கள் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருடன் பிரத்யேக செயலி மூலம் அடிக்கடி பேசி வந்ததும், அந்த வெளிநாட்டில் இருக்கும் நபருக்கும் கடந்த 2022ம் ஆண்டு சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கள்ளத்துப்பாக்கி தயாரித்ததாக கைதானவர்களுக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர்கள் கூறிய தகவலின் பேரில் தான் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் ரெய்டு நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வேளையில் நாம் தமிழர் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது ஏன்? பின்னணி என்ன? என்பது பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கி உள்ளார். தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் என்ற நிகழ்ச்சியில் சீமான் பிரத்யேகமாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் ஏகே 47 கிடையாது. நாங்கள் ஏகே 74. ஓமலூரில் பிடித்த 4 பேர் எங்களின் கட்சியா? இல்லையா? என்பது தெரியவில்லை. வலையொளியில் உறுப்பினராக கொண்டு வரும் முறை கொண்டு வரப்பட்டது. இதில் யார் வேண்டுமானாலும் கட்சியில் சேரலாம். கட்சியில் சேர்ந்த பிறகு வலைதளத்தில் ஒரு பதிவை போட்டுவிட்டு பிரச்சனையை உருவாக்கலாம். நம் கருத்து அதுவாக இருக்காது. ஆனால் அந்த பதிவை வைத்து நம் கட்சியின் கருத்து போல் கொண்டு வந்துவிட முடியும். இது தெரிந்து இணையதளம் மூலம் உறுப்பினர் சேர்க்கையை நிறுத்த கூறினேன்.
ஜெர்மனியில் இருந்து சீலன் என்பவர் அந்த பசங்களோடு தொடர்பில் இருந்துள்ளார். அந்த நபர் நம் கட்சியின் பிள்ளைகளுடனும் பேசியுள்ளார். பொதுவாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போர் எங்களுடன் பேசுவார்கள். நல்ல கருத்து கூறினால் நல்ல பேசியதாக பாராட்டுகள் வரும். அந்த வகையில் தான் பேசியுள்ளார். இதனால் அந்த பசங்களுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற ஐயத்தில் தான் இந்த சோதனை, விசாரணை நடந்துள்ளது. பல மணிநேரம், பல செல்போன் செயலிகள் மூலம் பேசியுள்ளதாக கூறப்படுவது என்பது பொய்யான தகவல். இதுபற்றி என்னிடம் கேட்பதற்கு பதில் விசாரணைக்கு சென்று வந்த தம்பிகளிடம் கேட்டால் விரிவான தகவல் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.