மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் பாஜகவில் இணைந்தார்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் இன்று பாஜகவில் இணைந்தார்.

மும்பையில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில், அசோக் சவான் இணைந்தார். அவரை வரவேற்றுப் பேசிய தேவேந்திர பட்னவிஸ், “மகாராஷ்டிராவின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தேர்வு செய்யப்பட்டவரும், இரண்டு முறை மகாராஷ்டிர முதல்வராகவும் இருந்த அசோக் சவான் பாஜகவில் இணைந்துள்ளார். இது மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது” என குறிப்பிட்டார்.

மகாராஷ்டிராவின் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான இவர், அம்மாநில அமைச்சராகவும், இரண்டு முறை முதல்வராகவும் பதவி வகித்தவர். காங்கிரஸில் செல்வாக்கு மிக்க தலைவரான அவர், பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ள நிலையில், இந்த ஆண்டு அக்டோபருக்குள் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்.

அசோக் சவானின் இந்த விலகல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிலிந்த் தியோரா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியிலும், பாபா சித்திக்கி, அஜித் பவாரின் கட்சியிலும் இணைந்தனர். இந்த நிலையில் அசோக் சவான் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்திருப்பது மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என கூறப்படுகிறது.