வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரிய சிபிசிஐடி மனுவை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்து இருந்தார். அவரது மனுவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் விசாரித்த உயர்நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயன் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. அந்த ஒரு நபர் விசாரணை ஆணையம், 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மறுபக்கம் இது தொடர்பாக விசாரணை செய்ய காவல்துறை சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 2023 ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பாக 147 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, 31 நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 394 நாட்களாக பல்வேறு வகைகளில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் வேங்கைவயல் வழக்கை மேற்கொண்டு வந்த விசாரணை அதிகாரி பால்பாண்டி நேற்று மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தஞ்சை சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத் புதிய விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் வேங்கைவயல் பட்டியலின மக்களின் நீர் தேக்கத் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் இந்த மனுவை விசாரித்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருக்கிறது.