செந்தில் பாலாஜியின் ராஜினாமா பாஜகவிற்கு கிடைத்த வெற்றி: அண்ணாமலை

செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது பாஜகாவிற்கு கிடைத்த வெற்றி என்று அண்ணாமலை கூறியுள்ளார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே ஜாமின் கிடைக்கும் என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் செந்தில் பாலாஜி. இதனையே தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று கொண்டாடுகிறார் அண்ணாமலை.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தாலும் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் செந்தில் பாலாஜி. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்வது போல கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கம்பீரமாக வலம் வந்தவர் தற்போது நீதிமன்றத்திற்கும் புழல் சிறைக்கும் அலைந்து கொண்டிருக்கிறார். கூடவே உடல் நலக்குறைபாடும் வாட்டி வதைக்கிறது. இதய அறுவை சிகிச்சை செய்த நிலையில் கால் வலியும் இருப்பதாக கூறி வருகிறார் செந்தில் பாலாஜி. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் சென்னை முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றமும் நிராகரித்தது. இதனிடையே, அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு பின்னர் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து நீடித்து வந்தார். அவர் வகித்து வந்த பொறுப்பு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். முன்பு ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, அமைச்சர் பதவி குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியிருந்தார். கடைநிலை ஊழியர் ஒருவர் குற்ற வழக்கில் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஆனால், செந்தில் பாலாஜி கடந்த 243 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார்? இதன்மூலம் சமூகத்துக்கு அரசு என்ன சொல்ல வருகிறது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வரும் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அந்த கடிதத்தை முதல்வருக்கு அனுப்பி வைத்தார். அதில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுகிறேன் என கூறியிருந்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. அதன்படி, முதலமைச்சர் முக ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார் ஆளுநர்.

இதனிடையே செந்தில் பாலாஜியின் ராஜினாமா பாஜகவிற்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார் அண்ணாமலை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காமல் இருப்பது பற்றி கருத்து கூறிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அவர் தமிழக அமைச்சராக நீடிப்பதால்தான் ஜாமின் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் நீக்க வேண்டும் என்று கூறிய அண்ணாமலை, அப்போதுதான் அவருக்கு ஜாமின் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளது பாஜகவிற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.