எந்த ஒரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத துயரத்தை சைதை துரைசாமி அடைந்து இருப்பதாக கூறி, வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயராகவும், தென் சென்னை மாவட்டக் அதிமுக முன்னாள் செயலாளராகவும் பதவி வகித்தவர் சைதை துரைசாமி. இவர் நடத்தி மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி மூலம் இலவசமாக பயிற்சி பெற்ற பலர் இன்று அரசு அதிகாரிகளாக உயர் பதவிகளில் உள்ளன. இவரது மகன் வெற்றி துரைசாமி ஐஏஎஸ் அகாடமியை கவனித்து வருவதுடன் திரைப்பட இயக்குநராகவும் உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இமாச்சலப் பிரதேசத்தில் வாகன விபத்து ஏற்பட்டு சட்லஜ் நதியில் விழுந்து காணாமல் போனார். காரில் சென்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாயமான வெற்றியின் உடலை 8 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று அவரது உடல் சட்லஜ் நதியில் கண்டெடுக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்து இருக்கிறார். அவர் வெளியிட்டு உள்ள இரங்கல் குறிப்பில், “இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன். எந்தவொரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத, எதிர்கொள்ள இயலாத துயரம் இது. உயிருக்கு உயிரான மகனை இழந்து தவிக்கும் சகோதரர் சைதை துரைசாமி அவர்களுக்கு இத்துயர்மிகு நேரத்தில் எனது இதய பூர்வமான ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டு உள்ள இரங்கல் குறிப்பில், “இமாச்சல பிரதேசம் சட்லஜ் நதியில் மாயமான வெற்றி துரைசாமி அவர்களின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கபட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. வெற்றி துரைசாமி அவர்களை இழந்து வாடும் அவரின் தந்தை சைதை துரைசாமி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைந்த தென் சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி அவர்களுடைய மகன் வெற்றி துரைசாமி அவர்கள் பிப்ரவரி 4-ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனம் நிலை தடுமாறி சட்லஜ் நதிக்கரையில் விழுந்ததைத் தொடர்ந்து, அவரது உடலை கடந்த 8 நாட்களாகத் தேடிவந்த நிலையில், இன்று அவரது உடல் மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
கழக நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர பற்றாளரும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் விசுவாசமிக்கத் தொண்டரும், கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டவரும், தனது வாழ்நாளில், தன்னாள் இயன்ற உதவிகள் அனைத்தையும் ஏழை, எளியோருக்கு செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், தனக்கென வாழாமல் மக்களுக்காகவே வாழ்ந்து வருபவரும், தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் பொருளாதார நிலையில் பின்தங்கிய மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருபவருமான அன்புச் சகோதரர் சைதை துரைசாமி அவர்கள், தாலாட்டி, சீராட்டி, அழகு பார்த்து வளர்த்த தன் ஒரே மகனை இழந்தது. அவருக்கு தாங்கிக்கொள்ள முடியாத, ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். மகளை இழந்து மிகுந்த சோகத்தில் வாடும் சைதை துரைசாமி அவர்களுடைய துயரத்தில் நானும் பங்கேற்கிறேன்.
பெற்ற மகளை இழந்து வாடும் அன்புச் சகோதரர் திரு. சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும். எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், வெற்றி துரைசாமி அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மேலும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அளிக்க, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான அன்புச் சகோதரர் திரு. சைதை ளு. துரைசாமி அவர்களின் மகன் திரு. வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மன வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து தவிக்கும் அன்புச் சகோதரர் துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகனின் இழப்பினைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அன்புச் சகோதரர் திரு. சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அளிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்து உள்ளார்.
சசிகலா வெளியிட்டு இருக்கும் இரங்கல் குறிப்பில், “தென்சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான திரு.சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சலப் பிரதேசத்தில் வாகன விபத்து ஏற்பட்டு சட்லஜ் நதியில் விழுந்து காணாமல் போய் 8 நாட்களாக தேடி வந்த நிலையில், தற்போது அவர் இறந்துவிட்டார் என்றும், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அன்பு சகோதரர் திரு. சைதை துரைசாமி அவர்கள் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். எங்கள் இயக்கத்தின் நலனுக்காக அயராது பாடுபட்டவர். தனது மகனை இழந்த இந்த கடினமான நேரத்தில் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளும் சக்தியையும், மன வலிமையையும் கொடுக்க ஆண்டவனை வேண்டுகிறேன். தனது மகனை இழந்து வாடும் அன்பு சகோதரர் திரு.சைதை துரைசாமி அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.” என்று தெரிவித்து உள்ளார்.
அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் வெளியிட்டு உள்ள இரங்கலில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான அண்ணன் திரு. சைதை எஸ்.துரைசாமி அவர்களின் மகனும், எனது நண்பருமான திரு.வெற்றி துரைசாமி அவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன். நான் அவரை உயிருடன் விரைந்து மீட்பதற்காக இமாச்சல பிரதேச மாநில அமைச்சர்கள் மற்றும் கின்னெளர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் ஆகியோரை தொடர்பு கொண்டு வலியுறுத்தினேன். ஆனால், அவரை உயிருடன் காப்பற்ற இயலவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது. மேலும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.