இந்த நாட்டின் ‘சிஸ்டத்தால்’ ஒரு சிலருக்கு ஆதாயம். பலருக்கு வரியும், பசியும்தான் மிச்சம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இன்று (பிப்.13) சத்தீஸ்கர் மாநிலம் சூர்குஜா மாவட்டத்தில் பயணித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த நாட்டில் நிலவும் ‘சிஸ்டம்’ ஆட்சி முறையால் ஒரு சிலர் வெகுவாக ஆதாயம் அடைகிறார்கள். ஆனால், சாமானிய மக்கள் ஜிஎஸ்டி வரி தொடங்கி எல்லா வரிகளையும் செலுத்துகின்றனர். இன்னும் சிலர் பசியில் வாடி உயிரிழக்கின்றனர். இதை, நீங்கள் அனைவரும் உங்களுக்கே ஒரு கேள்வி எழுப்பி பரிசோதியுங்கள். அன்றாடம் நீங்கள் உழைத்துப் பெறும் ஊதியம் எவ்வளவு, அரசின் மூலம் பெறும் உதவிகள் எவ்வளவு என்று கணக்கு செய்து பாருங்கள். வெறும் 10 நாட்களில் இந்த அரசின் அமைப்பால் நீங்கள் வஞ்சிக்கப்படுவது உங்களுக்குப் புரியும். அதன் பின்னணியில் பிரதமர் இருப்பதும் தெரியும்.
இந்த அரசால் ஆதாயம் பெறுவோரில் ஒருவர் கூட 73 சதவீதம் கொண்ட பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் ஏதும் பயன்பெறவில்லை. ஏழை மற்றும் பொதுப் பிரிவினர் சதவீதத்தினர் குறைவாக இருந்தாலும் அவர்கள் ஆதாயம் அடைகின்றனர். எஞ்சியவர்கள் வேடிக்கை பார்த்து, பசியால் மடிகின்றனர். ஜிஎஸ்டி கட்டிக் கொண்டிருக்கின்றனர். இவை மட்டுமல்லாது இந்த தேசத்தில் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன. வெறுப்பு பரப்பப்படுகிறது. எவ்வளவு வன்முறைகள் நடக்கின்றன என்று மக்கள் கணக்கில் கொள்ளமுடியாத அளவுக்கு அவை அன்றாட நிகழ்வாகிவிட்டன.
ஒரு கூட்டம் நிரம்பிய சந்தையில் நடக்கும் திருட்டைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள். ஒருவரிடமிருந்து திருடும் முன்னர் ஒரு திருடன் அந்த நபரின் கவனத்தை திசை திருப்புவான். பின்னர் அவனிடமிருந்து இன்னொரு கூட்டாளி பொருளைத் திருடுவான். நீங்கள் திசை திருப்பப்பட்டு ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு மூலம் களவாடப்படுவதுபோல் அது நடக்கும். அதையும் மீறி அபயக் குரல் எழுப்பினால் இன்னொரு திருடன் இருமுறை அடிப்பான். நீங்கள் சிறு வியாபாரியாக இருந்து அரசின் மீது அதிருப்தி தெரிவித்தால் உடனே சிபிஐ, ஐடி, அமலாக்கத் துறை சோதனைக்கு வரும். இப்படித்தான் நாட்டின் சிஸ்டம் இயங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, சத்தீஸ்கர் மாநிலம் கொர்பா நகரில் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-
நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினரின் பங்கு 74 சதவீதமாக உள்ளது. ஆனால், நாட்டின் 200 முன்னணி நிறுவனங்களின் உரிமையாளராகவோ அல்லது உயர்மட்ட நிர்வாகக் குழுவிலோ இந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லை. பெரிய மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் உயர் பதவியில் பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இந்தியாவை இந்து நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. ஆனால், நாட்டு மக்களில் 74 சதவீதம் பேருக்கும் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஏழைகளுக்கும் எதுவுமே கிடைக்கவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் வளங்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காக திருப்பி விடப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஏழைகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளை பார்க்க முடியவில்லை. ஆனால் அம்பானி, அமிதாப் பச்சன், அதானி உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை பார்க்க முடிந்தது. அதானி, அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் நாட்டு மக்களின் நலனை விலையாக கொடுத்து சீன பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டுகின்றனர். இது பொருளாதார அநீதி ஆகும்.
ராகுல் காந்தியின் பேச்சு ஏன் ஊடகங்களில் வெளியாவதில்லை என நீங்கள் கேட்கலாம். மோடி, அம்பானி, அதானி மற்றும் ராம்தேவ் உள்ளிட்டோரை ஊடகங்களில் பார்க்க முடியும். ஆனால், நாட்டில் உள்ள பிரச்சினைகளை பேசுவதால் ராகுலை பார்க்க முடியாது. நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அத்துடன் பணவீக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. ஏழைகள் பசியால் உயிரிழக்கின்றனர். நாட்டு மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். எனவே மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதனால் உங்கள் கவனம் சிதறடிக்கப்படுகிறது. செல்போன் மோகத்திலிருந்து விடுபட்டு உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.