சட்டசபையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம்!

தமிழ்நாடு சட்டசபையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையின் கூட்டத் தொடரின் மூன்றாவது நாளான இன்று 2 முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை எதிர்த்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைபடுத்தக்கூடாது என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவிடம் திமுக ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.

இதே போன்று, தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராகவும் சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. அதாவது, 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில், தற்போது உள்ள அதே விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை தொடரும் வகையில், சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளார். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள், தொகுதி மறுசீரமைப்பால், தங்கள் பிரதிநிதித்துவ பலத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு தீர்மானங்களை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிய உள்ளதாக தெரிகிறது. இந்த தீர்மானங்களின் மீது எம்எல்ஏக்கள் விவாதித்து அதற்கு பிறகு அவை நிறைவேற்றப்பட உள்ளன. சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் நாளை பேச உள்ளார். விடுமுறைக்குப் பிறகு வரும் 19ஆம் தேதியன்று 2024-25 ஆம் நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 20ஆம் தேதியன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.