பிப்,15ல் தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சிவ்தாஸ் மீனா எச்சரிக்கை!

பிப்ரவரி 15ல் ஜாக்டோ – ஜியோ வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து துறை செயலாளர்கள், துணை தலைவர்களுக்கும் அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழக அரசின் நிதி நிலைமை போதுமான அளவு இல்லாததால் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்நிலையில் தான் தங்களின் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 15ம் தேதி மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி மாதம் 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே தான் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பை வாபஸ் பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் நேற்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், ‛‛அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும். நிதி நிலைமை சரியான உடன் படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இதனால் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்” என தெரிவித்து இருந்தார்.

ஆனால் அவரின் கோரிக்கையை ஜாக்டோ ஜியோ ஏற்கவில்லை. மேலும் தங்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவதில் உறுதியாக இருக்கிறது.

இந்நிலையில் தான் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து துறை செயலாளர்கள், துணை தலைவர்களுக்கும் அவசர கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் ‛‛பிப்ரவரி 15ம் தேதி அரசு ஊழியர்களின் வருகை நிலை குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும். அன்றைய தினம் வேலைக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.