பேமிலி கோட்டாவில் படித்து, நடித்து, அரசியலில் வந்து, மந்திரியாக இருப்பவர் உதயநிதி: அண்ணாமலை!

பேமிலி கோட்டாவில் படித்து , நடித்து, அரசியலில் வந்து, மந்திரியாக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எல்.முருகன் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக போட்டியிடுகிறார். எங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்கிறோம். ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து பா.ஜ.க வெளிநடப்பு செய்து இருக்கின்றது.1952 இந்தியா முழுவதும் ஒரே தேர்தல் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து பலமுறை ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் இரு முறை 356-ஐ பயன்படுத்தி மாநில அரசை கலைத்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக, தேர்தல் சூழல் மாறிப்போனது. ஒரு வருடத்தில் 5 முதல் 7 தேர்தல்கள் நடைபெறுகின்றது என்றார்.

நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்து 1970 கால கட்டத்தில் எழுதி இருக்கின்றார். திமுகவின் கொள்கை ஒரு காலத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று இருந்துள்ளது என்றவர், 2024 ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் வர வாய்ப்பு குறைவு எனவும், அடுத்த 40 நாட்களில் நடைபெற வாய்ப்பு குறைவு எனவும் தெரிவித்தார்.

மக்கள் தொகை உறுப்பினர் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாக இருக்க வேண்டும் எனவும், ஒரு எம்.பியால் 20 லட்சம் பேருக்கு உதவ முடியாது, அது போல லட்சகணக்கில் மக்களை சட்டமன்ற உறுப்பினர்களால் கையாள முடியாது என தெரிவித்த அவர், தமிழக முதல்வர் எடுத்தேன், கவிழ்தேன் என சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்திருப்பது என்பது யோசிக்காமல் செய்திருப்பதாக பார்க்கின்றேன். மக்கள் தொகை மட்டுமே உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஒரு அளவீடாக இருக்கக் கூடாது என்பது பா.ஜ.கவின் கருத்து என தெரிவித்த அவர், இதை தொடர்ந்து பா.ஜ.க சொல்லியும் கூட குழப்புவதற்காக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

எல்.முருகனை நீலகிரியில் போட்டியிட வேண்டும் என யாரும் சொல்லவில்லை. நீலகிரி தொகுதியை தயார் செய்து வைக்க வேண்டும் என்று தான் முருகனுக்கு சொல்லப்பட்டுள்ளது என தெரிவித்தார். கட்சியிலிருந்து சொல்லப்பட்ட பணியை அவர் செய்தார். நீலகிரிக்கான வேட்பாளர் தயாராக இருக்கிறார், மற்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர் தயாராக இருக்கின்றனர். முருகன் அவருடைய வேலையை செய்திருக்கிறார்,
நீலகிரி தொகுதியை தயார் செய்யும் வேலையை அவர் இனிமேலும் பார்ப்பார் என்றார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பாஜக விவசாயிகளுடன் எப்பொழுதும் இருக்கும். இருமாநிலத்தில் இருக்கும் விவசாய குழுக்கள் சும்மா சும்மா டெல்லி வந்தால் என்ன செய்வது எனவும் கேள்வி எழுப்பினார். குறைந்தபட்ச ஆதார விலை கரும்பு, நெல் போன்றவற்றிக்கு கொடுக்கப்படும் என்று திமுக அரசு சொல்லியதை செய்யவில்லை, அதை இங்கு இருக்கும் விவசாயிகள் கேட்கவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை என்பதை சட்டமாக இயற்ற முடியாது எனவும், சம்பந்தம் இல்லாமல் ராகுல் காந்தி அரசியல் செய்து வருகின்றார் எனவும் தெரிவித்தார். ராகுல் காந்தி அடுத்த அறுபது நாட்கள் என்ன வேண்டுமானலும் பேசுவார், பாஜகவால் அப்படி பேச முடியாது என தெரிவித்த அவர், குறைந்தபட்ச ஆதரவு விலை எனக் கொண்டு வந்தால் 40 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு தேவைப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவை குண்டு வெடிப்பு கைதிகளை எந்த காரணமும் கொண்டும் அரசு சிறையில் இருந்து விடக்கூடாது. கோவை அபாயகரமான சூழ்நிலையில் இருந்து இன்னும் தப்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார். திமுகவில் கொத்தடிமைகளின் கூட்டம் அதிகமாகி விட்டது. மூலவர், உற்சவர் என்று பேசுகின்றனர், எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பேசுகின்றனர் எனவும், எம்.ஜி.ஆர் சினிமா துறையில் கால்பதித்து, அரசியலில் கால் பதித்து, பெரும் தலைவராக மக்கள் மனதில் இருந்தவர். பேமிலி கோட்டாவில் படித்து , நடித்து, அரசியலில் வந்து, மந்திரியாக இருப்பவர் உதயநிதி் ஸ்டாலின் என்றார். அதனால் ஒரு சதவீதம் கூட உதயநிதி ஸ்டாலினை எம்ஜிஆருடன் ஒப்பிட முடியாது என்றார்.

கோவை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, இருக்கின்ற வேலையே செய்ய முடியலை என தெரிவித்த அவர், கோவை தொகுதியில் போட்டியிடவில்லை, கோவையில் நல்ல வேட்பாளர்களை கொடுப்போம் என்றார்.

கவர்னர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பது எப்படி உரிமை மீறலாகும்? இரண்டு நிமிட வீடியோ பதிவு எப்படி உரிமை மீறலாகும். கவர்னரின் செயலை பா.ஜ.க மனப்பூர்வமாக ஆதரிக்கின்றோம் என்றார். லோக்சபா, ராஜ்யசபா சேனல்கள் 24 மணி நேரம் ஒளிபரப்பாகும் பொழுது சட்டசபை நிகழ்வுகளை ஏன் நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

நேற்று சபாநாயர் குறித்து பேசும் பொது கொஞ்சம் மாற்றி சொல்லி விட்டேன் என கூறிய அவர், தமிழகத்தின் சபாநாயகர் மோசமான உடன் பிறப்பாக இருக்கிறார் எனவும், சபாநாயகர் என்பவர் நடுநிலையாக இருக்க வேண்டும் , ஆனால் ஒரு சதவீதம் கூட அப்படியில்லை எனவும் தெரிவித்தார்.

பிரதமர் தமிழகம் வருகை தேதி மாற வாய்ப்பு உள்ளது. சில பேர் சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் பிரதமர் முன்னிலையில் இணைய இருக்கின்றனர். பாஜகவில் இணைய யாரையும் அழைக்கவில்லை, இணைய விரும்புபவர்களை சேர்த்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் வயதானவர்கள்தான் பாஜகவில் இணைந்து இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். எஸ்.பி.வேலுமணி தினமும் வாழ்த்தும் தலைவர்களின் வயது என்ன? அவரது கட்சிகள் இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன், இபிஎஸ் போன்றோரின் வயது என்ன? எனவும் அவர்கள் கட்சித் தலைவர்களை அவர்களே இழிவுபடுத்துகின்றனரா எனவும் கேள்வி எழுப்பினார். பாஜகவில் இணைந்த தலைவர்களின் வயது, அதிமுக இருக்கும் தலைவர்களின் வயதை விட 90 சதவீதம் குறைவு. அதிமுகவில் அசிங்கப்படுத்தியதால் அவர்கள் வெளியே வந்திருப்பார்கள் எனவும் தெரிவித்தார். எஸ்.பி.வேலுமணி கண்ணாடி கூண்டிற்குள் அமர்ந்து கல் எறிய கூடாது, அவர் மீது தனி மரியாதை உண்டு என கூறினார். இணைந்தவர்கள் யாரும் அதிமுகவை விமர்சிக்கவில்லை எனவும், பாஜகவில் கண்ணியமான அரசியல் செய்யும் பொழுது, இது போன்று இணைந்தவர்களை தவறாக சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? எனவும் தெரிவித்தார்.

கோவை சீட்டே கம்யூனிஸ்ட்டுக்கு கிடைக்குமா என தெரியவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் பிரச்சினைக்காக பேசியது நல்லகண்ணு காலம் எனவும் இப்பொது இல்லை எனவும் தெரிவித்தார். மாற்று திறனாளிகளுக்கு என தனி பிரிவு ஆரமிக்க பா.ஜ.க வில் ஆலோசித்து வருகின்றோம் எனவும், திமுக அரசு மாற்று திறனாளிகளுக்கு கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை, பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றுத்திறனாளிகளை தமிழகத்தின் முதல் குடிமகன்களாக அறிவிப்போம் எனவும் தெரிவித்தார்.

காதலர் தினத்திற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என கூறிய அண்ணாமலை, என்னுடைய திருமணமும் புரிதலின் அடிப்படையில் ஏற்பட்ட காதல் திருமணம், இளைஞர்கள் அவர்களுடைய வாழ்க்கை துணையை அவர்கள் தேர்வு செய்து கொள்கின்றனர் எனவும், திமுக காங்கிரஸ் மாதிரி காதல் திருமணம் இருக்கக் கூடாது, மோடி பிஜேபி மாதிரி காதல் திருமணம் இருக்க வேண்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.