தேர்தல் பத்திரம் வாங்காத ஒரெேகட்சி அதிமுக ஒன்று தான் என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கடந்த 2017-18 ஆம் நிதியாண்டுக்கு மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து இந்த திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. தேர்தல் பத்திரங்களை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும். ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகிறது. தனிநபர்கள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் என யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு இந்த தேர்தல் பத்திரங்கள் வழியாக நன்கொடை அளிக்கலாம். மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். இதுவே தேர்தல் காலத்தில் மட்டும் மாதம் முழுவதும் விற்பனை செய்யப்படும். தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்களின் விவரம் எதுவும் இருக்காது. இதனால், இந்த தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.
மேலும் இது தொடர்பாக தேர்தல் பத்திர திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரம் என்பது சட்ட விரோதமானது என்றும் அவற்றை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவே இந்த பத்திரங்கள் வழியாக அதிக நன்கொடை பெற்ற கட்சியாக உள்ளது. 6 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக பாஜக பெற்றுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மத்தியில் ஆளும் பாஜக அரசு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. இதனால், எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளன.
இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும், பாஜக மட்டுமின்றி திமுகவும் தேர்தல் பத்திரம் மூலமாக தொகை வாங்கியுள்ளதாகவும், தேர்தல் பத்திரம் வாங்காத கட்சி என்றால் அது அதிமுக ஒன்று தான் என்று கூறினார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
எங்களுக்கு அந்த மாதிரி பணமே வரவில்லையே.. வந்தால் தானே தெரியும். அதாவது அதுமாதிரி எங்களுக்கு வாய்ப்பு இல்லைப்பா.. வாய்ப்பு இருந்தால் எங்களுக்கு பத்திரத்தை பற்றி தெரியும். எங்களுக்கு தெரியவில்லை. இப்போ தான் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். முழுமையாக தெரிந்துகொண்ட பிறகு கருத்து கூறுகிறேன் என்றார்.
தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக ரூ. 6000 கோடி வாங்கியதாக வெளிவந்த தகவல் பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறுகையில், “ஏன் இங்கே இருக்கின்ற திமுக வாங்கவில்லையா. வாங்காத கட்சி அதிமுக ஒன்று தான். ரூ.480 கோடி வாங்கியதாக சொல்கிறீர்கள். இதற்கு எல்லாம் பதில் சொல்லட்டும். அப்போது தான் வெளியில் வரும். இப்படி தடுத்தால் தான் எங்கள் போன்ற கட்சிகளை நடத்துவதற்கு வாய்ப்பாக இருக்கும். ஏனென்றால் ஏகப்பட்ட பணம், கொள்ளையடிக்கப்பட்டது மட்டுமல்லாமல், இந்த மாதிரி பத்திரத்தின் மூலமாக நிதியை திரட்டி எங்களை போன்ற கட்சியினை ஒடுக்குகிறார்கள். நசுக்குகிறார்கள். இதனால் உச்சநீதிமன்றம் தீர்ப்பை நாங்கள் நிச்சயமாக வரவேற்கிறோம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.