பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: சுப்பிரமணிய சாமி!

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி ஆவேசமாக கூறியிருப்பது, பாஜகவை கடுப்பாக்கி வருகிறது.

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. தேர்தல் பத்திரம் திட்டம் அரசியல் சாசனத்தகு எதிரானது என்று சொல்லி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. மேலும், தேர்தல் பத்திரம் செல்லாது என அறிவிக்கவேண்டும் என்றும் மனுதாரர்கள் கூறியிருந்தனர். தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் மீறப்படவில்லை, யாருடைய உரிமையும் மீறப்படவில்லை என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிந்த நிலையில், இன்று ஒருமித்த தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர். அந்த தீர்ப்பில், “அரசை கேள்வி கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறி உள்ளன. தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. அதாவது, தகவல் அறியும் உரிமை சட்டம், அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. தேர்தல் பத்திர விவரங்களை வழங்காமல் இருப்பதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை. தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்பதால் அதனை ரத்து செய்கிறோம். தேர்தல்பத்திரம் விநியோகிப்பதை உடனே நிறுத்த வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தேர்தல் பத்திரங்கள் லஞ்சத்திற்கு வழிவகுக்கும் என்பதுடன், அரசியல் கட்சிகளுக்கு யார் பணம் தருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பொது மக்களுக்கு உரிமை உண்டு என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்த தீர்ப்பு குறித்து, முன்னாள் பாஜக உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, தன்னுடைய எக்ஸ் தளத்தில் கருத்து கூறியிருக்கிறார். அதில், “அலகாபாத் உயர்நீதிமன்றம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அரசு பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்தியதாக கண்டறிந்ததை சுட்டிக்காட்டி ஜெயபிரகாஷ் நாராயணன் இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் உருவாக்கிய ஜனதா கட்சியிலிருந்து உருவான பாரதிய ஜனதா கட்சி, ஜெயபிரகாஷின் அடிகளை பின்பற்றுமா? தேர்தல் பத்திரங்கள் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த அபத்தமான திட்டம். ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறிய பாஜகவின் மிகப்பெரிய ஊழல் இது.. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.