ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடி சமுதாயத்திற்கே கிடைத்துள்ள பெருவெற்றியாகும்: சீமான்!

பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டின் முதல் உரிமையியல் நீதிபதியாக தேர்வாகியுள்ள ஸ்ரீபதிக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள் என்று சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வில் வென்று, தமிழ்ப்பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டின் முதல் உரிமையியல் நீதிபதியாக தேர்வாகியுள்ள அன்புமகள் ஸ்ரீபதிக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

நீண்ட நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு, கல்வி விழிப்புணர்வற்ற, எவ்வித அறிவியல் வசதியும் கிடைக்கப்பெறாமல் வறுமையும், ஏழ்மையுமே வாழ்வியல் சூழலாக கொண்ட மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் பிறந்த போதிலும், தமது அறிவாற்றலாலும், அயராத முயற்சியாலும் தேர்வில் வென்று, இளம்வயதிலேயே இத்தகைய உயர் பதவியினை அடைந்துள்ள மகள் ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடி சமுதாயத்திற்கே கிடைத்துள்ள பெருவெற்றியாகும்.

மக்களாட்சி தேசத்தின் இறுதி நம்பிக்கையாகவுள்ள நீதித்துறையில் அரிதிற் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழை-எளிய மக்கள் இழந்த உரிமைகளைப் பெற்றுத்தரவும், ஏற்ற பொறுப்பில் திறம்பட செயல்பட்டு சாதனை புரியவும் எனது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்து புலியூர் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண் திருமதி.ஸ்ரீபதி (வயது 23) டி.என்.பி.எஸ்.சி. உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார். பெரிய அளவில் வசதிகள் இல்லாத கிராமத்தில் இருந்து கொண்டு பெரிய சாதனையை சிறுவதிலேயே செய்திருக்கிறார்.

பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். எனவே இதுபோன்று இன்னும் பல்வேறு சாதனைகளை செய்து ஒட்டுமொத்த பெண்களுக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக எப்பொழுதும் இருப்பார் என்று மனப்பூர்வமாக தே.மு.தி.க. சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.