முதல்வராக இருந்தவருக்குத் தெரியாதா?: எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி பதில்!

சட்டமன்றத்தில் தனது கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரானது ஆளுநர் உரையுடன் கடந்த 12ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் தீர்மானம் மீது பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். ஆளுநர் உரை மீதான தீர்மானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பதிலுரை வழங்கிய நிலையில், அதில் தான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அதாவது, “திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 52க்கும் அதிகமான குழுக்களை போட்டனர். அதன் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டேன். முதலமைச்சரின் பதிலுரையில் அதுகுறித்த தகவல் இல்லை. சென்னை மற்றும் தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புக்கு செய்த செலவு குறித்து சட்டமன்றத்தில் கேள்வி கேட்டேன். அதுகுறித்தும் தகவல் இல்லை. தேர்தல் அறிக்கையில் 10% மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதுதொடர்பாக பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ள சட்ட அமைச்சர் ரகுபதி, திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்கள் அரசின் செயல்பாட்டையும் நிதிநிலையையும் மேம்படுத்த அமைக்கப்பட்டவை. அவை நிர்வாகம் தொடர்புடையவை. அதை பொது பார்வைக்கு வைக்க வேண்டியது இல்லை என்பது முதல்வராக இருந்தவருக்குத் தெரியாதா? என்று கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வு குறித்து அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் போன்ற குழுக்களின் அறிக்கைகள் எல்லாம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய ரகுபதி, “சென்னையில் மிக்ஜாம் புயல், தென் மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிப்புகள் கடந்த டிசம்பரில் ஏற்பட்டவை. ஒரு மாதத்திற்குள்ளாகவே செலவு விவரத்தை எப்படித் தர முடியும்? பாதிப்படைந்த சாலைகள் உட்பட பல பணிகள் தொடர் செலவினமாக நடைபெறும் போது செலவு எவ்வளவு? என்று கேட்கிறாரே முதல்வராக இருந்த ஒருவர்” என்று விமர்சித்தார்.

ஒரு டிரிலியன் டாலர் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை எட்டத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விளக்கிய ரகுபதி, முதலமைச்சர் அளித்த பதிலுரையை கொஞ்சமாவது கவனித்திருந்தால் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகள் என்னென்ன என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்திருக்கும் எனக் காட்டமாக குறிப்பிட்டு முதலமைச்சர் உரையை சுட்டிக்காட்டினார்.

தேர்தலின்போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 208 வாக்குறுதிகளை நிறைவேற்றிய விவரத்தை முதலமைச்சர் ஏற்கனவே வெளியிட்டுள்ளார் என்றும், வாக்குறுதிகள் தொடந்து நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் கூறிய அமைச்சர், “ஆட்சிக்கு வந்த உடனேயே 505 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட வேண்டும் என யாராவது கேட்பார்களா? ஐந்து ஆண்டுகால ஆட்சியில்தான் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதே சமயம் இலவச செல்போன் உள்ளிட்ட அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.